விமர்சனம்: inside out 2!

Uncategorized

உதயசங்கரன் பாடகலிங்கம்

பதின்ம வயதினருக்கான படம்!

பதின்ம வயதில் ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கும். ஒரேநேரத்தில் பலவித உணர்ச்சிகள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும். எது சரி? எது தவறு என்று யோசிக்க முடியாதவாறு குழப்பங்கள் மனதில் கூடு கட்டும். அந்த நேரத்து முடிவுகளை மட்டுமே சிந்திக்கும் மனம். சில ஆண்டுகள் கழித்து, அந்த முடிவுகளில் பல அபத்தமாகக் கூடத் தெரியும்.

அப்படிப்பட்ட பதின்ம வயது மாற்றங்களுக்கு முக்கியத்துவம் தந்து, அதற்குக் காரணமான உணர்வுகளுக்கு ஒரு உருவம் கொடுத்தால் எப்படியிருக்கும் என்பதைச் சொல்கிறது ஆங்கில அனிமேஷன் படமான ‘இன்சைடு அவுட் 2’.

2015ஆம் ஆண்டு வெளியான ‘இன்சைடு அவுட்’ படத்தின் இரண்டாம் பாகம் இது.

கதை என்ன?

‘இன்சைடு அவுட்’ முதல் பாகத்தில் ரைலி என்ற சிறுமியின் பதினோராவது வயதில் நிகழும் சம்பவங்கள் கதையாக விரியும்.

அவரது மனதில் மகிழ்ச்சி, சோகம், வெறுப்பு, கோபம், பயம் ஆகியன முன்னிலை வகிக்கின்றன. அதிலும் சோகம் உள்ளிட்ட மற்றனைத்தையும் பின்னுக்குத் தள்ளி மகிழ்ச்சியே முதலிடம் வகிக்கிறது.

ஒருகட்டத்தில் சோகமும் மகிழ்ச்சியும் ரைலி மனதை விட்டு வெளியேற, மற்ற மூன்றும் அவரை ஆக்கிரமிக்கின்றன. அதனால் ஏற்படும் பின்விளைவுகளால் ரைலியின் வாழ்வே தலைகீழாகிறது. அதனை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர மகிழ்ச்சியும் சோகமும் என்ன செய்தன என்பதை அப்படம் சொன்னது.

’இன்சைடு அவுட் 2’ படத்தில் தனது 13ஆவது வயதில் ரைலி உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதாக, கதை தொடங்குகிறது. அதாகப்பட்டது, அவரது பதின்ம வயது மாற்றங்களை முன்னிலைப்படுத்துகிறது. அந்த வயதில்தான் அவர் ‘பூப்பெய்தும் நிலை’ ஏற்படவிருக்கிறது.

ரைலியின் மனதுக்குள் பூப்பெய்துவதற்கான எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. அதன்பிறகு, அவரது மனதில் மகிழ்ச்சி, சோகம், பயம், கோபம், வெறுப்பு ஆகியவற்றைத் தாண்டி பொறாமை, அதிருப்தி, சங்கடம், கவலை ஆகிய உணர்ச்சிகளும் வந்து சேர்கின்றன.

தனது பால்ய தோழிகளான பிரீ மற்றும் கிரேஸ் ஆகியோரை விட்டுப் பிரிந்து வேறொரு பள்ளியில் ரைலி படிக்க இருக்கிறார். தோழிகள் பிரிகின்றனர் என்பதை அறிந்ததுமே, அவரது மனம் வருத்தத்தில் ஆழ்கிறது. அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க, ஏதேதோ உணர்வுகளை அவர் வெளிப்படுத்தத் தொடங்குகிறார்.

தான் செல்லவிருக்கும் பள்ளியில் உள்ள ஐஸ் ஹாக்கி அணியைச் சேர்ந்த சிறுமிகளோடு நெருக்கமாகப் பழகத் தொடங்குகிறார். ஒருகட்டத்தில் தோழிகள் பிரீ, கிரேஸ் இருக்கும் அணியை விட்டு விலகி அவர்களது அணியில் ஒருவராகிறார். அவர்களை ‘டாமினேட்’ செய்து முதலிடம் பிடிக்க விரும்புகிறார்.

அந்த காலகட்டத்தில், ரைலியின் மனதில் இருந்து மகிழ்ச்சி, சோகம், வெறுப்பு, பயம், கோபம் ஆகிய உணர்ச்சிகளை விரட்டியடித்துவிட்டு கவலையும் இதர உணர்வுகளும் முன்னிலை பெறுகின்றன. அவையே ரைலியின் மனதை ஆக்கிரமிக்கின்றன.

ஒருகட்டத்தில் கவலையால் தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் ரைலியின் இயல்பையே குலைக்கிறது. அந்த நேரத்தில் மகிழ்ச்சியும் இதர உணர்ச்சிகளும் அவரது மனதுக்குள் மீண்டும் குடியேறுகின்றன. நிலைகுலைய இருந்த ரைலியைத் தாங்கிப் பிடிக்கின்றன.

அதன்பிறகு, பதின்ம வயதில் ரைலி என்னவாக சக மனிதர்களிடம் வெளிப்பட்டார் என்பதைச் சொல்வதோடு முடிவடைகிறது ‘இன்சைடு அவுட் 2’.
அனிமேஷன் படம் என்றவுடனேயே, ‘இது குழந்தைகள் பார்க்க வேண்டிய படம்’ என்ற முன்னுணர்வு நமக்குள் எழும். உண்மையில், இந்தப் படம் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் பார்க்க வேண்டியது.

ஷார்ட்ஸ், இன்ஸ்டாரீல்ஸ் என்று தன்னைச் சகாக்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளவும், எதிர்பாலினத்தவரை ஈர்க்கவும் பல காரியங்களை யோசித்துச் செயல்படுத்துகிற பதின்ம வயதினர் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது.

வித்தியாசமான அனுபவம்!

கெல்ஸி மன், மெக் லிபாவ் இதன் கதையை வடிவமைத்திருக்கின்றனர். மெக் லிபாவ் உடன் இணைந்து டேவ் ஹோல்ஸ்டெய்ன் திரைக்கதை அமைத்திருக்கிறார். கெல்ஸி மன் இதனை இயக்கியிருக்கிறார். அவர்களது எழுத்தாக்கமும் காட்சியாக்கமும் இணைந்து நமக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.

இந்த படத்தில் மகிழ்ச்சியை மஞ்சள் வண்ணத்திலும், கவலையை புதிய ஆரஞ்ச் வண்ணத்திலும், கவலையைப் பச்சை வண்ணத்திலும் பயத்தை ஊதா வண்ணத்திலும், கோபத்தை சிவப்பு வண்ணத்திலும் காட்டியிருக்கின்றனர். இது போல ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு உருவம், வண்ணம் உண்டு. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஹாலிவுட்டை சேர்ந்த நடிகர், நடிகைகள் குரல் இரவல் தந்திருக்கின்றனர்.

ரைலியின் மனதைக் கட்டுப்படுத்தும் இடத்தை ‘கன்சோல்’ என்று சொல்லி ஒரு எந்திரம் போலக் காட்டுகிறது இதன் கதை. அதற்கேற்ப தயாரிப்பு வடிவமைப்பாளர் ஜேசன் டீமர் மற்றும் கலை இயக்குனர்கள் காட்சிப் பெட்டகத்திற்குள் இடம்பெறும் உள்ளடக்கத்தை வடிவமைத்துள்ளனர்.

ஆடம் ஹபீப், ஜோனதன் பிட்கோ இருவரும் இதில் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். உணர்ச்சிகள் மொத்தமாகக் கொட்டப்பட்டிருக்கும் இடம், அங்கிருந்து சிலவற்றை மட்டும் உறிஞ்சி எடுப்பது போன்றவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ‘கூஸ்பம்ஸ்’ தருணங்களாக இருக்கின்றன.

ஆண்ட்ரியா டாட்ஸ்மன் இதற்கு இசையமைத்திருக்கிறார். இசைய இல்லாமல் இந்த படத்தைப் பார்ப்பது கடினம். விஷுவல் எபெக்ட்ஸ் உட்பட இப்படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் நூற்றுக்கணக்கானோரின் உழைப்பு உள்ளது.
இயக்குனர் கெல்ஸி மன் இப்படத்தைப் பதின்ம வயதினருக்கானதாக உருவாக்கியிருக்கிறார்.

அந்த வயதில் இருப்பவர்களிடம் தொற்றுகிற குழப்பங்களுக்கு, அதற்கு அவர்கள் தீர்வு காணப்படுகிற விதத்திற்கு, அதனைக் கடந்தபிறகு ஏற்படும் மனோபாவத்திற்கான காரண காரியங்களை விலாவாரியாகப் பேசுகிறது ‘இன்சைடு அவுட் 2’. அதுவே இப்படத்தின் பலம்.

இப்படத்தைப் பார்ப்பதன் வழியாகத் தமது எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கான ஒரு பார்வையைப் பதின்ம வயதினர் பெறக் கூடும். அந்த ஒரு காரணத்திற்காகவே, அவர்கள் இதனைப் பார்த்து ரசிக்கலாம்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரைட்டராக அவதாரம் எடுத்த ஆலியா பட்

மாஞ்சோலை… மறக்க முடியாத வரலாறு : திக்கற்று நிற்கும் தொழிலாளர்களை திரும்பி பார்க்குமா அரசு ?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *