இயக்குநர் மாருதி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘ராஜா சாப்’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று(அக்.23) அவரது பிறந்த நாளை முன்னிட்டு அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக பிரபாஸ் நடிக்கும் தெலுங்கு மசாலா படமாக இல்லாது ஒரு திரில்லர் படத்திற்கான பாணியில் இந்த மோஷன் போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.
நரை முடியுடன் இதுவரைக் காணாத ஓல்டு கெட்டப்பில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பிரபாஸ், வாயில் சுருட்டு, அமர்வில் தோரணை என ஒரு புதுவிதமான பிரபாஸை இந்தப் படத்தில் காணலாம் என மோஷன் போஸ்டரே சொல்கிறது. இந்த வீடியோவின் இறுதியில் ‘ஹாரர் இஸ் தி நியூ ஹியூமர்’ என்கிற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் சஞ்சய் தத், நிதி அகர்வால், அனுபம் கேர், முரளி சர்மா, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொள்ள இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் தனது 25ஆவது படத்திற்காக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா