வைஃபை ஆன் செய்ததும் பிரதமர் மோடியின் சென்னை விசிட் பற்றிய போட்டோக்களும் வீடியோக்களும் வந்து விழுந்து கொண்டே இருந்தன.
அவற்றை பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 8) சென்னை வந்தார். விமான நிலைய பன்னாட்டு முனையம், வந்தே பாரத் துவக்க விழா,0, ராமகிருஷ்ணா மிஷன் விழா, பல்லாவரத்தில் நலத்திட்ட விழா என்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். புறப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் சில அரசியல் தலைவர்களையும் சந்தித்துள்ளார்.
பிரதமர் மோடியின் விசிட் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால்.. இந்த விசிட்டில் அவரது கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மோடியை வரவேற்க கூட வரவில்லை என்பதும் மற்ற எந்த நிகழ்ச்சிகளிலும் முன்வரிசையில் அண்ணாமலை இல்லை என்பதும் கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது,
கர்நாடக தேர்தல் பணிகளுக்காக டெல்லி செல்கிறேன் என்று சொல்லிவிட்டு நேற்று அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்று இருக்கிறார். ’நாளைக்கு மோடி வருகிறார். இப்போ நீங்க டெல்லி போறீங்களே?’ என்று அவருக்கு நெருக்கமானவர்கள் அண்ணாமலையிடம் கேட்டபோது, ’அதெல்லாம் நான் வந்து விடுவேன்’ என்று சொல்லிவிட்டு தான் சென்றிருக்கிறார். ஆனால் இன்று பிற்பகல் 2. 45க்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வரும் வரை அண்ணாமலை சென்னைக்கு வரவில்லை. அதற்குப் பிறகும் அவர் சென்னைக்கு வரவில்லை.
கடந்த முறை திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக விழாவுக்கு பிரதமர் மோடி வந்தபோது… திண்டுக்கல்லில் இருந்து மதுரை வரை மோடியின் காரிலேயே ஒன்றாக சென்றவர் அண்ணாமலை. அப்படிப்பட்ட இமேஜ் கொண்ட அண்ணாமலை இன்றைய மோடியின் வருகையில் வரவேற்கக்கூட வரவில்லை என்பது தமிழ்நாடு பாஜக வட்டாரத்திலும் அதைத் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது.
சமீப காலங்களாகவே நான் ஒரு தேசிய கட்சியின் மேனேஜர் இல்லை என்றும் நான் ஜெயலலிதா கருணாநிதி மாதிரி முடிவு எடுக்கக் கூடிய ஒரு தலைவர் என்றும் அண்ணாமலை தொடர்ந்து சொல்லி வந்தார். மேலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் மார்ச் 17ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் அண்ணாமலை. அதை மின்னம்பலம் தான் வெளிக்கொண்டு வந்தது.
அதன்பிறகு தொடர்ந்து கூட்டணி விவகாரத்தில் தேசிய தலைமையோடு முரண்பட்டு அண்ணாமலை பேசிவந்த நிலையில்… மோடி தமிழகம் வரும் முக்கியமான நிகழ்வில் அண்ணாமலை கலந்து கொள்ளாதது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான தொடக்க புள்ளியோ என்ற விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதே நேரம் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்காக அண்ணாமலை டெல்லி சென்றிருக்கிறார் என்று சமூக தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்காக, ஒரு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்கள் என்று தேர்வு செய்யப்பட்டு கட்சியின் மத்திய தேர்வு கமிட்டிக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது. கட்சியின் மத்திய தேர்வு கமிட்டி ஏப்ரல் 9ஆம் தேதி கூடி இறுதி வேட்பாளர் பட்டியலை முடிவு செய்யும் என்று கர்நாடக முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்வதற்கு இணை பொறுப்பாளரான அண்ணாமலை டெல்லியில் இருக்க வேண்டிய அவசரமோ அவசியமோ இல்லை என்கிறார்கள் ஒரு தரப்பில்.
ஆனாலும் பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது அங்கே மாநிலத் தலைவரான அண்ணாமலை இருக்கத் தேவையில்லை என்று தேசிய தலைமை முடிவு செய்ததால்தான் அண்ணாமலையை டெல்லியில் இருங்கள் என்று உத்தரவிட்டுள்ளது.
இது அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட வலிமையான எச்சரிக்கை மட்டுமல்ல, அவமதிப்பாகவும் கருதப்படுகிறது. கர்நாடக தேர்தல் பணி ஏதோ அண்ணாமலையால் மட்டுமே கவனிக்கப்படுவது போல ஒரு தோற்றத்தை அவரது ஆதரவாளர்கள் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் பிரதமரின் மோடி விசிட்டின் போது அண்ணாமலையை தமிழ்நாட்டிலேயே இருக்க வேண்டாம் என்று தேசிய தலைமை அறிவுறுத்தி இருப்பதன் பின்னால் அவர் மீதான நடவடிக்கை ஆரம்பம் ஆகிவிட்டதாகவே தெரிகிறது என்கிறார்கள் இங்கு உள்ள சீனியர்கள்.
நாளை (ஏப்ரல் 9) முதுமலை காப்பகத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார். இன்று இரவு மைசூர் செல்லும் பிரதமர் அங்கிருந்து நாளை காலை முதுமலைக்கு செல்கிறார். அப்போதாவது அண்ணாமலை அங்கே சென்று பிரதமரை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவானது. ஒருவேளை மைசூரிலும் நீலகிரியிலும் முதுமலையிலும் பிரதமர் மோடியை அண்ணாமலை சந்திக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் தமிழ்நாடு பாஜக அடுத்தடுத்த திருப்பங்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி : பிரதமர் முன் மு.க.ஸ்டாலின்
“இந்தியாவின் கட்டமைப்பு வளர்ச்சியில் புரட்சி”: பிரதமர் மோடி பெருமிதம்!