இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம், வருகிற அக்.31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தில் சஞ்சனா, பால சரவணன், காளி வெங்கட், தேவதர்ஷினி, சுவாசிகா விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர்.
கடந்த செப்.20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம், மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. கிராமப் புற கிரிக்கெட் டோர்னமெண்ட்களில் உள்ள சாதிய அரசியல், போட்டியில் உள்ள உளவியல் சிக்கல் எனப் பலவற்றை கமர்சியல் தன்மையுடன் பேசியதால் இந்தப் படம் பெரும்பாலான ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. இந்த ஆண்டில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படங்களின் பட்டியலில் ‘லப்பர் பந்து’ இடம்பெற்றது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரித்த இந்தப் படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருசோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, மதன் ஜி படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும், இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்திக் – அரவிந்த் சாமி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படமும் வருகிற அக்.27ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம், கடந்த செப்.27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. கிராமப் புற வாழ்வை ரசிக்கும் ஒருவனுக்கும் கிராமத்துக்கே வர விரும்பாத மற்றொருவனுக்கும் இடையேயான உரையாடலே ‘மெய்யழகன்’.
பரபரப்பான ஆக்ஷன் படங்கள் மத்தியில் மென்மையான மனிதர்களின் உரையாடலாக வெளியான இந்தத் திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பெரும்பாலான விமர்சனங்கள் படத்தின் நீளத்தைக் குறித்தே இருந்ததால், இரண்டு மணி நேரம் ஐம்பத்தி ஏழு நிமிடங்களாக இருந்த இந்தத் திரைப்படத்தை இரண்டு மணி நேரம் முப்பத்தி எட்டு நிமிடங்களாக படக்குழுவினர் பின்னர் குறைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://whatsapp.com/channel/0029Va9qXdF9xVJWumpP4T04
– ஷா
மீண்டும் கார் ரேஸராக அஜித் : ஏகே ரேஸிங் அணியின் லோகோ வெளியானது!
கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக விழுந்துவிடும் : எடப்பாடி பழனிசாமி