2ஜி ஏல முறைகேடு… கிஷோர் கே சுவாமி பதிவிட்டது உண்மையா?

Uncategorized

5ஜி ஏலம் குறித்து பேசி தன் மீதான 2ஜி குற்றச்சாட்டு உண்மைதான் என்று ஆ.ராசா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கிஷோர் கே சுவாமி தெரிவித்துள்ளார்.

5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26ம் தேதி ஆன்லைனில் தொடங்கியது. 9 விதமான அலைவரிசை (பேண்ட்கள்) ஏலத்தில் இடம்பெற்ற நிலையில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல், கவுதம் அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ் மற்றும் வோடபோன் ஐடியா இடையே ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன.

இதனால் ஏலத்தின் மூலம் சுமார் 4.30 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கிடைக்கும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஆனால் 6 நாட்கள் நடைபெற்ற 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தின் 40 சுற்றுகள் முடிவில் மொத்தம் 1.50 லட்சம் கோடி மட்டுமே பெற்றுள்ளதாக அறிவித்தார்.

டிவிட்டரில் டிரெண்டான #5G_Scam_BJP!

10 ஆண்டுகளுக்கு முன்னர் அதுவும் 2ஜி அலைக்கற்றையில் ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு என்பதை ஊழல் என்று ஊடகங்கள் வர்ணித்தன. இந்நிலையில் 5ஜி அலைக்கற்றை எதிர்ப்பார்க்கப்பட்டதை விட சுமார் ரூ.2.80 லட்சம் கோடி குறைவாக ஏலம் சென்றுள்ள நிலையில் ஏன் தற்போது ஊழல் என்று கூறவில்லை என சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக டிவிட்டரில் #5G_Scam_BJP என்ற ஹேஷ்டேக் மூலம் மத்திய அரசுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்த நிலையில் டிரெண்டானது.

5ஜி ஏலத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது!

5ஜி ஏலம் குறித்து டெல்லியில் திமுக எம்பி ஆ.ராசா நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வெறும் 30 மெகாஹெர்ட்ஸ் கொண்ட 2 ஜி அலைகற்றையை நான் ட்ராய் பரிந்துரையின் அடிப்படையில் கொடுத்த போது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று அன்று இருந்த சிஏஜி வினோத் ராய் ரிப்போர்ட் கொடுத்தார். ஆனால் இன்று ஏலம் விட்டிருப்பது 51 ஜிகாஹெர்ட்ஸ். 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம்விடப்படும் என்று மத்திய அரசு கூறிய 5ஜி அலைக்கற்றை 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. மீதி 2.80 லட்சம் கோடி ரூபாய் பணம் எங்கு சென்றது. இவ்வளவு குறைவான தொகைக்கு ஏலம் சென்றதற்கு என்ன காரணம்? நான்கைந்து நிறுவனங்களுடன் சேர்ந்து மத்திய அரசு கூட்டுச் சதி செய்துவிட்டதா..? 5ஜி ஏலத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும்.” என்று கூறினார்.

2ஜி குற்றச்சாட்டு உண்மையை ஒப்புக்கொண்ட ஆ.ராசா!

இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன சமூக தளப் பதிவர் கிஷோர் கே சுவாமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தன் மீதான 2ஜி குற்றச்சாட்டு உண்மைதான் என்று ஆ.ராசா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,

”2ஜியை விட பல மடங்கு அதிக விலைக்கு ஏலம் போயிருக்கும் 5ஜியில் ஊழல் நடந்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டைக் கூறி தன் மீதான 2ஜி குற்றச்சாட்டு உண்மைதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஸ்பெக்ட்ரம் ஆ.ராசா. 2012-ல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் போன தொகை ரூ. 9,400 கோடி, 2013-ல் அதே 2ஜி : ரூ. 6,400 கோடியாக இருந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2014-ல் அதே 2ஜி : ரூ. 61,200 கோடி, 2015-ல் 2ஜி & 3ஜி : ரூ. 109,000 கோடி, 2016-ல் 2ஜி, 3ஜி, 4ஜி : ரூ. 65,789 கோடி, 2021-ல் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி : ரூ. 77,815 கோடி, 2022-ல் 2ஜி,3ஜி,4ஜி,5ஜி : ரூ. 150,000 கோடி ஏலம் விடப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஸ்பெக்ட்ரம் ஏலம் என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எடுப்பதே அதில் அழைப்புகளுக்கான கட்டண வசூலுக்கும் சேர்த்துதான். 2012, 2013-ல் அழைப்புகளுக்கும், டேட்டாவுக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது தெரியும். அப்போதெல்லாம் இணைய வழி தொடர்புகள் மிகக் குறைவு. உள்ளூர், வெளிநாட்டு அழைப்புகள் 95%-க்கும் மேல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழியே மட்டுமே நடைபெற்றது.

வாட்ஸப் உள்ளிட்ட உலகம் முழுதும் தொடர்பு கொள்ள இலவச தொலைத்தொடர்பு செயலிகள் பெருகி விட்ட இந்தக் கால கட்டத்தில் அழைப்புகளுக்கான வருமானம் என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மிக மிகக் குறைந்து விட்ட நிலையில் அவர்களால் லாபம் பார்க்க முடியாத சூழ்நிலையும் நிலவுகிறது. இருந்த போதிலும் பத்தே ஆண்டுகளில் 9,400 கோடியிலிருந்து ஒன்றரை லட்சம் கோடிக்கு ஏலம் போயிருப்பதை ஸ்பெக்ட்ரம் ஆ.ராசா ஊழல் என்று சொல்கிறார் என்றால் 2ஜியில் என்ன நடந்திருக்கும் என்பதை பொதுமக்களே நினைத்துப் பார்க்கட்டும்” என்று தெரிவித்துள்ளார் கிஷோர் கே.சுவாமி.

கிஷோர் தெரிவித்துள்ள கருத்துகள் பற்றி சமூக தளங்களில் காரசார விவாதம் நடந்துவருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக அலுவலகம் : உச்ச நீதிமன்றத்தை நாடிய பன்னீர்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “2ஜி ஏல முறைகேடு… கிஷோர் கே சுவாமி பதிவிட்டது உண்மையா?

  1. நரம்பன் கரெக்டா பேசிருக்கான்..தரவுகள் ஆல்ரெடி கிளியர்..இவன் காபி பேஸ்ட் மட்டுமே..🥰 ராஜாதி ராஜா…..
    வெயிட் அன்ட் சீ டிசம்பர் 28 க்கு மேல..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *