அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள திரைப்படம் ‘பிரம்மாஸ்திரா’.
கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன்முகர்ஜி உள்ளிட்டோர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் 4 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்தது.
ஷாருக்கான், அமிதாப் பச்சன், நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படத்திற்கு ப்ரித்தம் இசையமைத்திருந்தார்.
சுமார் ரூ.410 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 9 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
முதல் நாள் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆனதாக கரண் ஜோஹர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்தி சினிமாவில் வாரிசு நடிகர்கள், நடிகைகள் பற்றி அடிக்கடி வெளிப்படையாக கருத்துக்களைப் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்புகிற கங்கணா ரணாவத் பிரம்மாஸ்திரா படத்தையும் விட்டுவைக்கவில்லை.
தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “அயன் முகர்ஜியை ஜீனியஸ் என்று சொன்னவர்களை உடனடியாக சிறையில் தள்ள வேண்டும். இப்படத்தை உருவாக்க அவர் 12 ஆண்டுகளை எடுத்துக் கொண்டார்.
14 ஒளிப்பதிவாளர்களை மாற்றியுள்ளார். 400 நாட்களுக்கு மேல் இப்படத்திற்கு படப்பிடிப்பு நடத்தியுள்ளார். 85 உதவி இயக்குனர்களை மாற்றியுள்ளார். 600 கோடி ரூபாயை சாம்பலாக்கி உள்ளார்.
’பாகுபலி’ கொடுத்த வெற்றி காரணமாக, ‘ஜலாலுதீன் ரூமி’ என்ற படத்தின் பெயரை கடைசி நேரத்தில் ‘ஷிவா’ என மாற்றி மத உணர்வுகளை சுரண்ட முயன்றுள்ளனர்.
இத்தகைய சந்தர்ப்பவாதிகள் படைப்பாற்றல் இல்லாதவர்கள். வெற்றிப் பேராசை கொண்டவர்களை மேதைகள் என்று அழைப்பது என்பது இரவைப் பகல் என்றும் பகலை இரவென்றும் அழைப்பது போலாகும்,” என்று விமர்சித்துள்ளவர் ‘பிரம்மாஸ்திரா’வின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹரையும் விடவில்லை.
“கரண் ஜோஹர் போன்றவர்களின் நடத்தையை விசாரிக்க வேண்டும். அவர் தனது திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்களை எழுதுவதை விட மற்றவர்களின் பாலியல் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
விமர்சனங்கள், போலி வசூல் விவரங்கள், ஸ்டார்களை அவரே விலைக்கு வாங்குகிறார். இந்த முறை இந்து மதத்தையும், தென்னிந்திய அலைகள் மீதும் சவாரி செய்ய முயன்றுள்ளார்.
எல்லாருமே திடீரென பூஜாரிகளாக மாறி தென்னிந்திய நடிகர்கள், ரைட்டர்ஸ், டைரக்டர்ஸ் ஆகியோரிடம் தங்கள் படத்தை பிரமோட் செய்ய பிச்சை எடுக்கின்றனர். அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
ஆனால், திறமையான ரைட்டர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மற்ற திறமைசாலிகளை பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
‘பிரம்மாஸ்திரா’ என்ற டிசாஸ்டரை சரி செய்ய, அவர்கள் கெஞ்சிச் சென்றவர்களை ஏன் முதலில் பிக்ஸ் செய்யவில்லை” என்றும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இது பற்றி எந்த கருத்தையும் கூறாத தயாரிப்பு நிறுவனம், பிரம்மாஸ்திரா திரைப்படம் முதல் நாள் ரூ.75 கோடி இரண்டாம் நாள் 85 கோடி ரூபாய் உலகம் முழுவதும் மொத்த வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
–இராமானுஜம்
எட்டு வருட கடின உழைப்பு பிரம்மாஸ்திரா : ராஜமௌலி