கள்ளக்குறிச்சி சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது: மு.க.ஸ்டாலின்

Published On:

| By Jegadeesh

கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவங்கள் தனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று ( ஜூலை 18 ) தமிழ்நாடு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொளி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

“ஜூலை 18 என்ற மதிப்புமிக்க இந்த நாளில் இத்தகைய சிறப்பான விழாவை ஏற்பாடு செய்திருக்கக் கூடிய அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். தமிழ்நாடு முதல்வர் என்ற முறையிலும் எனது தனிப்பட்ட முறையிலும், பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், இன்று காலையில்தான் இல்லம் திரும்பினேன்.

கொரோனா தொற்று என்பது முழுமையாக நீங்கிவிட்டது என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறேன். சாதாரணமான காய்ச்சலாக இருந்திருந்தால், அது குணமடைந்ததும் நம்முடைய பணிகளைத் தொடங்கி விடலாம்.  தொற்று என்பதால், அது மற்றவர்களுக்கும் பரவாமல் இருப்பதற்காக, நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று நீங்கிவிட்டாலும், சில நாட்களாவது ஓய்வெடுக்க வேண்டும்.

அந்த அடிப்படையில், நேரடியாக வந்து விழாவில் பங்கேற்பது இயலாத ஒன்று ஆகிவிட்டது. மற்ற நிகழ்ச்சிகளை ஒத்தி வைப்பது, தள்ளி வைப்பது போல, தமிழ்நாடு திருநாளை தள்ளி வைக்க இயலாது என்பதால், காணொளி மூலமாவது பேசி விட வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கே நாம் பல ஆண்டுகளாக போராட வேண்டி வந்தது, வாதாட வேண்டி இருந்தது, பேச வேண்டி இருந்தது, எழுத வேண்டியிருந்தது, உயிரைத் தர வேண்டி இருந்தது, ரத்தம் சிந்த வேண்டி வந்தது, மாநிலங்களவையில் குரல் எழுப்ப வேண்டி வந்தது, சட்டமன்றத்தில் தொடர்ந்து கேட்க வேண்டி வந்தது, தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டி வந்தது. இத்தனைக்குப் பிறகும் தமிழ்நாடு என்று சொல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இறுதியாக, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்த காரணத்தால்தான், தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தை அல்ல… ரத்தமும், சதையும் கொண்ட வாழ்க்கை போராட்டம்” என்று பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து அவர்,

“இந்தியாவில் 100 சிறந்த கல்லூரிகளில், 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள். இந்தியாவில் மூன்றாவது சிறந்த கலைக்கல்லூரி நம்முடைய சென்னை மாநிலக் கல்லூரி தான். சென்னை மாநிலமாக இருந்து தமிழ்நாடாக மாறியதால் தமிழ்நாடாக மாற்றப்பட்டதால் விளைந்த பயன்கள் இவை. திமுக அரசு அமைந்ததால் ஏற்பட்ட பயன்கள் இவை. இதுதான் சிலருக்குப் பொறாமையாகவும், வயிற்றெரிச்சலாகவும் இருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய ஆட்சியாக உருவாக்க நாம் அனைத்து வகையிலும் முயற்சித்து வரும் இந்த நேரத்தில், மன வருத்தம் ஏற்படும் வகையில் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவங்கள் அமைந்துள்ளன” என்று குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment