என்னதான் பார்த்துப் பார்த்து செய்து வைத்தாலும் இந்த பூச்சிகள் கிச்சனுக்குள் எப்படித்தான் வருதுன்னு தெரியலை என்று அலுத்துக்கொள்பவர்கள் அநேகர். ஆனால், அவை சமையலறைக்குள் வராமல் தடுக்கும் வழி நம்மிடம்தாம் உள்ளது.
குறிப்பாக இயற்கை முறையில் பூச்சிகள் வராமல் தடுக்கும் வித்தையைக் கடைப்பிடித்தால், கெமிக்கல் பொருள்களைக் கொண்டு, இந்த உயிரினங்களைக் கொல்வது தவிர்க்கப்படும். மேலும், உணவுப் பொருள்களில் இந்த கெமிக்கல்கள்பட்டு உணவும் விஷமாகாமல் காக்க முடியும்.
நம் முன்னோர்கள் சொன்ன ஜீவகாருண்யத்துடன், சமையலறையை சுத்தமாக வைக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும்.
* வீட்டில் எறும்புத் தொல்லை இருந்தால் கொஞ்சம் பெருங்காயத்தூள் தூவினால் போதும், எறும்பு எட்டிக்கூட பார்க்காது.
* உணவுப் பொருள்களில் வண்டு வராமல் இருக்க வேப்பிலையுடன் வசம்பை ஒரு துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி போட்டு வைக்கலாம்.
* சமையலறையின் நான்கு மூலைகளிலும் நான்கு டம்ளர்களில் உப்பு சேர்த்த தண்ணீர் நிரப்பி வைத்தால் எறும்புகள் நெருங்காது.
* தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை இலைகளைப் போட்டு, அதன் எசென்ஸ் இறங்கும் வரை சிறிது நேரம் வைத்திருந்து, பின்பு அந்தக் கலவையை அறை முழுவதும் தெளித்துவிட்டால், ஈ, எறும்பு, பல்லி எதுவுமே அண்டாது.
* பருப்பு வகைகள் தீர்ந்து போய், டப்பா காலியாக இருந்தால் உடனடியாக அதில் நிரப்பாமல், நன்கு கழுவி காய வைத்து பிறகு, சாமான்களை அதில் போட வேண்டும். இதனால், வண்டு வருவது தவிர்க்கப்படும்.
* உடனுக்குடன் ஒரு துணியை எடுத்து காஸ் அடுப்பை பளிச்சென துடைப்பது என்று மேடையை, சிங்க்கை சுத்தமாக ஈரமின்றி வைத்திருந்தாலே பூச்சிகள் அண்டாது.
* பிரியாணி இலை, கிராம்பை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளலாம். இதைத் தண்ணீரில் கலந்து கரப்பான் பூச்சி, அதன் முட்டை இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்தால் போதும். மசாலா வாசனைக்கு கரப்பு காணாமல் போய்விடும்.
* கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே பலருக்கும் அலர்ஜிதான். மழைக் காலத்தில் வீட்டில் கரப்பான் பூச்சித் தொல்லை அதிகமாக இருக்கும். பிரிஞ்சி இலை, கிராம்பு இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து மேடை மற்றும் சிங்க்கில் தெளித்துவிட்டால் போதும். அந்த வாசத்துக்கு கரப்பான்பூச்சிகள் வரவே வராது.
* பாத்திரங்களைக் கழுவியதும் சிங்க்கில் நாப்தலின் உருண்டைகளைப் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சி வராது. தண்ணீர் வெளியேறும் குழாய்களின் வழியாகப் பூச்சிகள் உள்ளே வருவதும் தடுக்கப்படும்.
* ஒரு பாட்டிலில் இரண்டு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு வினிகர், லைம் ஜூஸ் கலந்து வைத்துவிடுங்கள். இரவு நேர சமையல் முடிந்தவுடன், சுத்தமாக ஈரத்தன்மை இல்லாமல் துடைத்துவிட்டு, தயாரித்துவைத்துள்ள பேக்கிங் சோடா கலவையை எடுத்து ஸ்பிரே பண்ணிவிடுங்கள். அது, பூச்சிகளுக்கு நோ என்ட்ரி சொல்லும்.
**[நேற்றைய ரெசிப்பி: டிபன் சாம்பார்](https://www.minnambalam.com/public/2021/02/06/3/Tiffin-sambar)**�,