”விஜய்யின் அரசியல் வருகையால் எனது வாக்குகள் குறையாது. அவருடைய ரசிகர்களில் பாதிப்பேர் எனக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்” என சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (அக்டோபர் 29) தேனி அருகே மதுராபுரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “நான் ரசிகர்களை தொண்டர்களாகவோ, ரசிகர் மன்றங்களை கட்சி கிளை மன்றங்களாகவோ ஆக்கவில்லை.
எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும்போது அவர்களது ரசிகர்களைச் சந்தித்துதான் அரசியலுக்கு வந்தனர். ஆனால் திரைத்துறையில் இருந்து வந்த நான், மக்களைச் சந்தித்து அரசியலுக்கு வந்தேன்.
இந்த மண்ணில் நன்கு வளர்ந்து விஷச் செடியாக இருப்பது ஜாதி மத உணர்ச்சி. செத்து போனது மொழி, இன உணர்ச்சி.
அதை இளைஞர்களுக்கு உணர்வூட்டி ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் தனித்து நின்று 36 லட்சம் வாக்குகள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சியை உருவாக்கியது நான் தான்.
பிரபாகரன் பிள்ளைகளுக்கும், நடிகர்களை பார்த்து கைத்தட்டும் ரசிகர்களுக்கு வித்தியாசம் இருக்கிறது. கமல்ஹாசன் அரசியலுக்கு வரும்போதும் இதே போன்ற நெருக்கடி எனக்கு இருந்தது.
சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியைக் காண பல லட்சம் பேர் குவிந்தனர். கூட்டத்தை வைத்து ஓட்டை கணக்கிட முடியாது.
பொதுவாக புகழ்பெற்ற ஒரு நடிகர் பொது இடத்திற்கு வரும்போது, அவரை பார்ப்பதற்காக கூட்டம் அதிகளவு வரும். அது இயல்பானது. அதை வைத்துக்கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவு என்று கூற கூடாது.
கூட்டத்திற்கு வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் சந்தேகம்தான்.
என் கட்சியில் இருந்து யாரும் வெளியேற மாட்டார்கள். விஜய் கூட நிற்கிற ரசிகர்களில் பாதிப் பேர் எனக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்.
கூட்டணியில் இருப்பவர்களுக்கு, ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்ற கொள்கை விஜய்யின் பெருந்தன்மை. அதனை வரவேற்கிறேன். அழைப்பு விடுப்பது அவரது உரிமை. அதனை ஏற்று கூட்டணியில் இணைவது என்பது மற்ற கட்சிகளின் விருப்பம்.
எங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி கிடையாது, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். அதுதான் எங்கள் நிலைப்பாடு” என சீமான் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
என்னது.. விஜய் பாயாசம் ரிசிப்பி சொன்னாரா? : அப்டேட் குமாரு
”விஜய்யின் சேவை… கண்டிப்பாக தேவை” : துரை வைகோ