உசிலம்பட்டி அருகே 96 வயது மூதாட்டி ஒருவர் தான் இறந்தால், நீங்கள் யாரும் கலங்க கூடாது, இறந்தவீடு மாதிரி இருக்கக்கூடாது என்று கூறி வந்துள்ளார். இதையடுத்து, அவரது இறப்பை பேரன், பேத்திகள் கொண்டாடி தீர்த்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் நாகம்மாள். 96 வயதான இவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள். பேரன், பேத்திகள் 78 பேர் உள்ளனர்.
நாகம்மாள் தன் பிள்ளைகள், பேரன், பேத்திகள் மீது அளவு கடந்த பாசமும், அன்பும் காட்டி வந்துள்ளார். கோபமே பட்டது கிடையாதாம். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அவர் குடும்பத்தினரிடம் அடிக்கடி கூறியுள்ளார்.
தனக்கு முதுமையாகிவிட்டதால், தான் இறக்கும்போது யாரும் வருத்தப்படக்கூடாது. நான் இறந்தாலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். ஆடல், பாடல், மேளம் என்று திருவிழா போன்று எனது இறுதிச்சடங்கை நடத்த வேண்டும். துக்கவீடு போன்று அன்றைய தினம் இருக்கக்கூடாது என்று கூறி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நாகம்மாள் இறந்து போனதையடுத்து, அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற குடும்பத்தினர் முடிவெடுத்தனர். ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்தனர். இறப்பை மைக்செட் போட்டு திருவிழாவாக ஏற்பாடு செய்தனர்.
நாகம்மாளின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சடலத்தை சுற்றி வந்து கும்மி அடித்தனர். ஆடல் பாடல் ஒரு பக்கம் நடக்க மறுபுறம் நாகம்மாள் உடலுக்கு உறவினர்கள், குடும்பத்தினர், கிராம மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இறப்பு வீடு போல அல்லாமல் திருமண வீடு போல களை கட்டியது.
பொதுவாக ஜப்பான் நாட்டில்தான் மக்கள் சர்வசாதாரணமாக 100 வயதை தாண்டி வாழ்வார்கள். அந்த வகையில், 100 வயதை எட்ட 4 வருடங்கள் இருக்கும் போது, இறந்த நாகம்மாளின் இறப்பு கொண்டாட்ட நாளாக மாறி போனது.
இது குறித்து சின்னப்பாலார்பட்டி மக்கள் கூறுகையில், “வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் எப்போதும் முக்கியம் என மூதாட்டி எங்களிடம் அடிக்கடி கூறுவார். அவரும் அவ்வாறே நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து 96 வயதில் இறந்துள்ளார். அவரின் கடைசி ஆசையை குடும்பத்தினரும் நிறைவேற்றி வைத்தது மகிழ்ச்சியை தந்துள்ளது” என்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பில்லை… தனி அதிகாரிகள் நியமிக்கப்படும் 28 மாவட்டங்கள் என்னென்ன?
விஜய்யுடன் விமான பயணம்: வதந்திகளுக்கு நாய், சேவலை சுட்டிக்காட்டி திரிஷா பதிலடி!
மாநில அரசுக்கு அன்றாடம் ’தலைவலி’ கொடுப்பதற்குத்தான் ஓர் ஆளுநரா? : கி.வீரமணி கேள்வி!
Comments are closed.