ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் அதன் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் தான் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய பெஞ்ச் இன்று (செப்டம்பர் 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது குறித்து அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (செப்டம்பர் 2) வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலா வரும் என்று சொல்லுவார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் அதிமுக தொண்டர்களையும், திமுக அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களையும் காக்கும் அறப்போரில் முழு மனதோடு ஈடுபட்டு வருகிறோம்.

இந்த அரும் பணிகளுக்கு தடையாக உடன் இருந்தே கொல்லும் வியாதிகளாக நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒரு சில சுயநல விஷமிகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.
இவர்களின் கெடுமதிகளை முறியடிக்க தூய்மையான மனதுடன் நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம். இன்றைய தினம் தர்மம் நீதி வென்றுள்ளது.
ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றும் ஜூலை 11ஆம் தேதி கழக சட்ட விதிகளின் படி நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும்,
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் முடிவுகளும் அறிவிப்புகளும் செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இன்று வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

இந்த சட்ட போராட்டத்தில் என்னோடு துணை நின்ற தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற -சட்டமன்ற உறுப்பினர்கள்,
அனைத்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சட்ட வல்லுநர்கள், கழகத்தில் பல்வேறு நிலை நிர்வாகிகள் மற்றும் கோடிக்கணக்கான அடிப்படை தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
–வேந்தன்
எடப்பாடிக்கு வெற்றி : பொதுக்குழு செல்லும் -உயர்நீதிமன்றம் அதிரடி!