வினேஷ் போகத் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனதன் உண்மையான காரணம் என்ன என்பது உறுதி செய்யப்பட வேண்டும்” என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில், மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய நட்சத்திரம் வினேஷ் போகத் பைனலுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்து இருந்தார்.
இந்த நிலையில், இன்று உடல் எடை தகுதி சோதனை செய்தபோது நிர்ணயித்த 50 கிலோவை விட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால், வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சாம்பியனுக்கு நீதி வேண்டும்!
அதன்படி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது பதிவில், “வினேஷ் போகத் இந்தியாவின் பெருமை. அவர் உலக சாம்பியன்களை தோற்கடித்தார். ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் நீதிக்காக நடைபாதையில் போராட்டம் நடத்தியது முதல் ஒலிம்பிக் போட்டியின் உச்ச மேடையை அடைவது வரை நிறைய கடந்து சென்றார். அவர் என்ன செய்யப்போகிறாள் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
இதுதொடர்பாக ஒலிம்பிக் சங்கத்திடம் முறையிட அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
எங்கள் சாம்பியனுக்கு நீதி வேண்டும். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன் உள்ளன. உங்கள் தைரியம் என்றென்றும் ஊக்கமளிக்கிறது.
நீங்கள் அதிக உறுதியுடன் வளையத்திற்குத் திரும்புவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என கார்கே தெரிவித்துள்ளார்.
அரசின் அறிக்கை வேண்டும்!
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்கள் சந்திப்பில், “உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அரசிடம் இருந்து விளக்கம் கேட்டு வருகிறோம். இது எங்களுக்கு மிகவும் சோகமான தருணம். ஆனால் நாங்கள் வினேஷ் போகத் நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். முழு நாடும் அவரைப் பற்றி பெருமிதம் கொள்கிறது. இதுதொடர்பாக அரசின் அறிக்கையை நாடு கேட்க விரும்புகிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.
வினேஷ் விட்டுக்கொடுப்பவர் அல்ல!
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது பதிவில், “உலக சாம்பியன் மல்யுத்த வீரர்களைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பெருமைக்குரிய வினேஷ் போகத், தொழில்நுட்பக் காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த முடிவை கடுமையாக சவால் செய்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
வினேஷ் விட்டுக்கொடுப்பவர் அல்ல, அவர் மீண்டும் களத்தில் வலுவாக வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
நீங்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் வினேஷ். இன்றும் உங்கள் பலமாக முழு நாடும் உங்களுடன் நிற்கிறது” என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
முழுமையான விசாரணை தேவை!
உத்தரபிரேதச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வினேஷ் போகத் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனது குறித்த விவாதத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அதன் உண்மை என்ன, உண்மையான காரணம் என்ன என்பது உறுதி செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நிர்ணயித்த 50 கிலோவை விட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால், வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக ஒலிம்பிக் சங்கம் தற்போது அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து பேச்சு : அப்பாவுக்கு சம்மன்!
வினேஷ் போகத் அதிகாரப்பூர்வமாக தகுதியிழப்பு: ஒலிம்பிக் விதிகள் சொல்வது என்ன?