பிஎஸ்என்எல்லின் நிதிநிலையை சீர் செய்ய ரூ 1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு துறையில் ஜாம்பவானாக கொடிகட்டி பறந்த பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. குறிப்பாக கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.15,499.58 கோடி இழப்பும், 2020-21 நிதியாண்டில் ரூ.7,441.11 கோடியும் பிஎஸ்என்எல்லின் மொத்த வருமான இழப்பாக இருந்தது.
தனியாா் நிறுவனங்களின் வரவு, நிா்வாகச் சீா்குலைவு, சேவைக் குறைபாடு, 4ஜி சேவை வழங்க முடியாத நிலை போன்றவற்றால் நாட்டின் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளா்களை படிப்படியாக இழந்தது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரவும், நிர்வாகச் செலவுகளை சமாளிப்பதற்கும் போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என பிஎஸ்என்எல்லின் சார்பாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இன்று (ஜூலை 27) அஸ்வினி வைஸ்னவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பிஎஸ்என்எல்லின் நிதிநிலையை சீர் செய்யவும், சேவைகளை விரிவுபடுத்தவும், தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இணையசேவை வழங்கவும் ரூ 1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் பிஎஸ்என்எல் உடன் இணைக்கப்படும் என்றும் 5 ஜி அலைக்கற்றை இதுவரை ரூ 1.49 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் 9-வது சுற்று ஏலம் நடைபெற்று கொண்டிருக்கிறது என தொலைத் தொடர்பு மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவைகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் இந்தியா முழுவதும் செயல்படுத்தும் என்று முன்னதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- க.சீனிவாசன்