இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என ஓ. பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 25) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுகவின் கொடி, பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
தனி நீதிபதியின் இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், “இரட்டை இலை சின்னத்தை தனது தலைமையில் இருந்த மதுசூதனனுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது” என வாதிடப்பட்டது.
மேலும் இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகுவதற்கு தடை விதிக்க கூடாது என்று கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.
இதனையடுத்து, ”தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிவிட்ட நிலையில் இந்த வழக்கில் எந்தவித இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே ஓபிஎஸ் இரட்டை இலையை பயன்படுத்த தடை தொடரும்” என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தை அணுகுவதற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றம், தேர்தல் முடிந்த பிறகு ஜூன் 10ஆம் தேதி இந்த வழக்கில் இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”கணேசமூர்த்தி உயிர்பிழைக்க 50-50 தான் வாய்ப்பு உள்ளது” : வைகோ கவலை!
வெள்ளியங்கிரி மலையேறிய 3 பேர் உயிரிழப்பு : வனத்துறை எச்சரிக்கை!
Meetha Ragunath: காதலில் ‘விழுவேன்’ என நினைக்கவில்லை… வைரலாகும் ‘குட் நைட்’ நடிகையின் பதிவு!