வயதான முதிய பெற்றோருக்கு மூன்று வேளை உணவுளித்தால் போதுமா? அன்பும் ஆதரவும் தர வேண்டாமா? கன்னியாகுமரி மாவட்டத்தில் மகன்கள் மூன்று வேளை சாப்பாடு கொடுத்தாலும், பரிவு காட்டாத காரணத்தினால் உடல் நலம் பாதித்த மனைவியை கொலை செய்யும் அளவுக்கு 90 வயதான கணவர் தள்ளப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குருத்தங்கோடு அருகேயுள்ள ஆசாரிவிளை கிராமத்தில் வசித்து வருபவர் சந்திர போஸ். 90 வயதான இவர் பனையேறும் தொழிலாளி. தற்போது வயது மூப்பு காரணமாக வீட்டில் இருந்து வந்தார். மூன்று மகன்கள், மூன்று மகள்களும் இவருக்கு உண்டு. அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர்.
இதனால் சந்திரபோஸ் தனது மனைவி லட்சுமியுடன் தனியாக வீட்டில் வசித்தார். மூன்று மகன்களும் ஆளுக்கு ஒரு வேளை உணவு கொடுத்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே லட்சுமியும் படுத்த படுக்கையாக கிடந்துள்ளார். எனினும், மனைவியை கணவர் சந்திரபோஸ் பாசத்துடன் கவனித்து வந்துள்ளார். பிள்ளைகள் தாயை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சந்திரபோசுக்கு கண் பார்வை முற்றிலும் மங்கியுள்ளது. இதனால், மனைவியை பராமரிக்க முடியாமல் திணறியுள்ளார்.படுத்த படுக்கையாக கிடந்ததால், லட்சுமிக்கு உடலின் பின்பக்கம் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், வலி தாங்காமல் லட்சுமி அடிக்கடி அழுதுள்ளார்.மனைவியின் நிலையை கண்டு வேதனை தாங்க முடியாத நிலையில் சந்திரபோஸ் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார்.
பின்னர் , மனைவியை கருணைக் கொலை செய்வது என்று கனத்த மனதுடன் முடிவெடுத்துள்ளார். நேற்று காலை மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டின் கதவருகே அப்படியே அமர்ந்து விட்டார். இந்த சமயத்தில் இளையமகன் சாந்தகுமார் பெற்றோருக்கு உணவு கொண்டு வந்துள்ளார்.
அப்போது, தாய் கொல்லப்பட்டு கிடப்பதையும் தந்தை கண்ணீருடன் அமர்ந்திருப்பதையும் கண்டு அதிர்ந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தாயின் சடலத்தை பார்த்து மகள்கள், மகன்கள், பேரக்குழந்தைகள் அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார், சந்திரபோஸை கைது செய்தாலும், அவரை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வயதான காலத்தில் பெற்றோருக்கு உணவு அளிப்பதை விட ஆறுதலும் அக்கறையும்தான் முக்கியமென்பதையே இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
லட்டு விவகாரம் : பவன் கல்யாணிடம் வருத்தம் தெரிவித்த கார்த்தி
பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘லப்பர் பந்து’