இந்து மத சாமியார்களை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட ஆல்ட் நியூஸ் இணைய தளத்தின் இணை நிறுவனர் முகமது சுபருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் 2018-ம் ஆண்டு ட்விட்டரில் பதிவிட்டதாகக் கூறி ஆல்ட் நியூஸ் இணை நிறுவ னர் முகமது சுபைர் கடந்த ஜூன் 27-ம் தேதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து, பா.ஜ.க. பிரமுகர் நுபுர் சர்மா பேசிய கருத்துக்களை வெளிக்கொண்டு வந்ததற்காக முகமது சுபைர் பழிவாங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்து மத சாமியார்களை வெறுப்பு பேச்சு பரப்புபவர்கள் என ட்விட்டரில் பதிவிட்டதாகக் கூறி சுபைர் மீது உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக உத்தரப் பிரதேச அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
சீதாப்பூரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து ஜாமீன் கோரி சுபைர் தொடர்ந்த வழக்கை கடந்த ஜூலை 8-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனாலும் டெல்லி போலீஸ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்தார் சுபைர்.
இந்நிலையில், டெல்லி போலீஸ் தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி சுபைர் தாக்கல் செய்த மனு டெல்லி அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுபைருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீ வஸ்தாவா, “2014 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்ற பிறகு சுபைர் வெளியிட்ட பதிவுகள் இரு தரப்பினர் இடையே மோதலை உண்டாக்கும் வகையில் இருந்தது” என்று கூறினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி தேவேந்திர குமார், இந்திய ஜனநாயகமும் அரசியல் கட்சிகளும் விமர்சனங்களுக்குட்பட்டவை என்றும் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு எதிர்க்கருத்துகள் முக்கியமானது என்றும் கூறினார்.
இந்து மதம் சகிப்புத் தன்மை நிறைந்தது என்றும் இந்துக்கள் தங்கள் நிறுவனங்களுக்கும் குழந்தைகளுக்கும் பெருமையுடன் இந்து கடவுள்களின் பெயர்களை சூட்டுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இதனால் அவர்களை குறித்து பேசுவது இந்து கடவுள்களை அவமதிப்பது ஆகாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சுபைர் மீது புகார் அளித்த ட்விட்டர் கணக்கின் உண்மைத் தன்மையை போலீசார் நிரூபிக்க முடியாததை கருத்தில் கொண்ட நீதிபதி, 50 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை செலுத்தி ஜாமீனில் செல்ல சுபைருக்கு அனுமதி அளித்தார். மேலும், நீதிமன்றத்தின் அனுமதி இன்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இது வரை 2 வழக்குகளில் இருந்து மட்டுமே சுபைருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சுபைர் மீது இன்னும் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் தொடர்ந்து சிறையில்தான் இருக்கிறார்.
~அப்துல் ராபிக் பகுருதீன்