‘ ஸ்மிருதி இரானி திமுகவை பார்த்து அலறுகிறார்’: ஸ்டாலின் பதில்!

Published On:

| By Jegadeesh

Unanswerable Smriti Irani

ராகுல் காந்தியின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி , தன் பேச்சில் தி.மு.க. மீது அவதூறு சுமத்தி, திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 10) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதில், ”இந்தியாவின் தலைநகரிலும் பிற மாநிலங்களிலும் கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள். நாட்டின் பிரதமர், தான் கலந்துகொண்ட மத்திய பிரதேச மற்றும் அந்தமான் நிகோபர் நிகழ்ச்சிகளில் தி.மு.க. மீது தேவையின்றி விமர்சனம் வைக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார் ராகுல்காந்தி.

மணிப்பூரைப் பற்றி, அங்கு நடக்கும் கலவரம் பற்றி அங்கே பற்றி எரியும் வன்முறைத் தீ பற்றிப் பேசினார். ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷம் போடும் பா.ஜ.க.வின் ஆட்சியில் மணிப்பூரில் பாரத மாதா என்ன நிலையில் இருக்கிறார் என்பதைக் கேள்வியாக முன்வைத்தார் ராகுல் காந்தி.

இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பார் என்பதால்தான் அவரது எம்.பி. பதவியைப் பறிப்பதில் பா.ஜ.க. படுவேகம் காட்டியது. ஆனால், உச்சநீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டி, நாடாளுமன்றத்தில் இளஞ்சிங்கமாக நுழைந்து கர்ஜித்திருக்கிறார் ராகுல்.
அவருடைய வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சர் ஸ்மிருதி இரானி , தன் பேச்சில் தி.மு.க. மீது அவதூறு சுமத்தி, திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார்.

நமது கழகத்தின் மக்களவை உறுப்பினர் – துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று, மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் பொறுப்பில்லாத்தனமாகப் பேசிய நிலையில், அதற்கு ஆ.இராசா உடனடியாக பதிலடி கொடுத்ததை உடன்பிறப்புகளான உங்களில் பலர் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

“நான் கைது செய்யப்படப் போவதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி மிரட்டுகிறார். இதன் மூலமாக நீதித்துறையை பா.ஜ.க. அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று கூற வருகிறாரா?” என்று ஆ.இராசா நாடாளுமன்றத்தில் உரத்த குரலில் கேட்டதற்கு, ஆளுந்தரப்பில் உரிய பதில் தரப்படவில்லை.

பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பா.ஜ.க. அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரைப் பார்த்து, “எங்களை எதிர்த்தால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்” என்ற வகையில் பேசிய அமைச்சரை ஒரு சில நாட்களுக்கு முன் நாடு பார்த்தது.

தி.மு.க இத்தகைய மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல. மக்களவையில் கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களும், மாநிலங்களவையில் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா அவர்களும் ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதச் செயல்களை அம்பலப்படுத்திப் பேசியிருக்கிறார்கள்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் தங்கை கனிமொழி சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி, பா.ஜ.க.வின் செங்கோல் லட்சணத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார். தயாநிதி மாறன் டெல்லி சட்டமசோதா பற்றி பேசியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கலைஞரின் வார்ப்புகள் அப்படி” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா: ட்ரெய்லர் வெளியீடு!

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை: பாஸ் வழங்குவதில் கட்டுப்பாடுகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share