பீகார் சட்டமன்ற தேர்தல் தோல்வியை எதிர்க்கட்சிகளால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் சடங்கு சம்பிரதாயம் அல்ல. இந்தியாவில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை வெளிக்காட்டக் கூடியது; ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தி வருகிறோம்.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்பது, உங்கள் தோல்வியின் பதற்றம், விவாதத்துக்குரியதாக இருக்கக் கூடாது. நாம் மக்களின் பிரதிநிதிகள்.. நமக்கான பொறுப்புகளை உணர்ந்து, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரானது, நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கக் கூடியதாக இருக்க வேண்டும். நாம் மக்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். எதிர்க்கட்சிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் எழுப்புகிற பிரச்சனைகள் வலுவானதாக இருக்க வேண்டும்.
பீகார் சட்டமன்ற தேர்தல் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் சில கட்சிகள் இருக்கின்றன. அந்த தோல்வியை அவர்கள் கடந்து வர வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு தோல்வியின் துயரம் வாட்டி வதைக்கிறது.
அரசியலுக்கு வேண்டுமானால் எதிர்மறை அணுகுமுறைகள் பயன்படலாம். ஆனால் நாட்டை கட்டமைப்பதில் நேர்மையான எண்ணங்கள் அவசியம். உங்கள் எதிர்மறை அணுகுமுறைகளுக்கு ஒரு எல்லை- வரம்பை வைத்துக் கொள்ளுங்கள்.

நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் மற்றொரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. மாநிலங்களவையை புதிய தலைவர்- (துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன்) வழிநடத்த இருக்கிறார்; அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
நாம் நடைமுறைப்படுத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது. இதே போல நடப்பு கூட்டத் தொடரில் நிறைய பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி ஆலோசனை
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுகவின் டிஆர் பாலு, திருச்சி சிவா, மநீம கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
