டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 1-ஆம் தேதி வரை அவருக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கெஜ்ரிவால் கைதுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டெரெஸ் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கருத்து தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது மற்றும் காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்டீபன் டுஜாரிக், “இந்தியாவிலும் அல்லது தேர்தல் நடைபெறும் எந்த நாட்டிலும், மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவரும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிக்க முடியும் என்ற சூழல் இருப்பதாக ஐநா நம்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வதை சவாலாக மாற்றும் வகையில், வருமான வரித்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகளையும் நாங்கள் அறிவோம். இந்தச் சிக்கல்கள் அனைத்திற்கும் நியாயமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.
இந்தியாவிற்கான ஜெர்மனி தூதர் ஜார்ஜ், “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர். குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்ற அனுமானம் அவருக்கும் பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஜெர்மனி நாடுகளின் கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், இது உள்விவகாரம் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஜெர்மன் தூதர் ஜார்ஜ் என்ஸ்வீலர் மற்றும் அமெரிக்கா தூதர் குளோரியா பார்பெனா ஆகியோருக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்!