சிறப்புக் கட்டுரை: இந்தப் போரில் உக்ரைன் பெற்றதென்ன? – பகுதி 2

Published On:

| By admin

பாஸ்கர் செல்வராஜ்

ரஷ்யாவுடனான ஐரோப்பிய எண்ணெய் கும்பலின் கூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறது. ரஷ்யா மேற்கின் தொடர்பில் இருந்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு உதவிய உக்ரைன் என்ன பெற்றது?

ADVERTISEMENT

அந்த நாட்டின் அதிபர் செலன்ஸ்கி வெளியேற உதவுவதாகச் சொன்னபோது, ‘எனக்கு இடம் வேண்டாம். எங்களுக்குப் போரிட ஆயுதங்கள் கொடுங்கள்’ என்றார். உடனே பல மில்லியன் பெறுமான ஆயுதங்களை மேற்கு வழங்கியது. அடுத்து, ‘போரிட ஆட்கள் வேண்டும்’ என்றார். உணர்வைத் தூண்டும் முகநூல் பதிவுகள் நிரம்பி வழிந்தது. சிரியா போருக்கு ஐரோப்பிய இஸ்லாமியர்களை துருக்கி வழியாக அனுப்பி போரிட வைத்ததுபோல ரஷ்ய எதிர்ப்பு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் ஆட்கள் திரட்டப்பட்டு போலந்து எல்லையில் நிற்கிறார்கள். அடுத்து, ‘எங்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார். பார்க்கலாம். ஆனால், ‘அது நீண்ட காலம் பிடிக்கும் நடவடிக்கை’ என்றார் ஐரோப்பிய ஒன்றிய தலைவர். அடுத்து, ‘உக்ரைனின் பில்லியன் டாலர் பெறுமான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார். அதுபற்றி பேச்சு மூச்சு எதுவும் இல்லை. சமூக ஊடகங்கள் வாயிலாக ரஷ்யாவுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தும் உளவியல் போரிலும் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்தும் நிதியப்போரிலும் மேற்கு வெற்றி பெற்றாலும் உக்ரைன் களப்போரில் எழுபது விழுக்காடு படைத்திறனை இழந்து பல பகுதிகளில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது. உக்ரைனியர்களின் வீரமிக்க போராட்டத்தை நினைவில் கொள்வோம் என்னும் ஐரோப்பிய ஒன்றிய உருசலாவின் பேச்சு இந்தப் போரில் தோற்கும் உக்ரைனுக்கு வாசிக்கும் இரங்கற்பாவைப் போன்றிருக்கிறது. அடுத்து உள்நாட்டு குழப்பம், கொரில்லா போர் என உக்ரைனை ரஷ்யாவின் புதைகுழியாக்கும் ஆலோசனைகளும் அமெரிக்க வட்டத்தில் வலம் வருகிறது. உக்ரைனியர்கள் உயிரைவிட்டதைத் தவிர வேறு எதையும் அடைந்ததாகத் தெரியவில்லை.

ADVERTISEMENT

**ரஷ்யாவின் பதிலடி நடவடிக்கைகள்! **

பொருளாதார இழப்பைச் சந்தித்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ரஷ்யா செயற்கைக்கோள்களை ஏவப் பயன்படும் ராக்கெட் என்ஜின்களை அமெரிக்காவுக்குக் கொடுக்க மறுப்பு, ஜெர்மனிக்குச் செல்லும் எரிவாயு நிறுத்தம் எனத் தனது பதிலடிகளைத் தொடங்கி இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை 120 டாலர்களையும் எரிவாயுவின் விலை இரண்டு மடங்காகவும் ($5/MMBTU) அதிகரித்திருக்கிறது. எல்லா பொருட்களின் விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த எரிபொருள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி வர்த்தக சூதாடிகள் விலையை ஏற்றி கொழுத்துக்கொண்டிருக்கிறார்கள். கொளுத்திப் போட்டு எரிய விடப்பட்டுள்ள இந்தப் போரில் ராணுவத் தளவாட உற்பத்தியாளர்களும், அரசியல், வர்த்தக, வணிக சூதாடிகளும் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். உசுப்பி விடப்பட்டு மதியிழக்கச் செய்த மக்கள் இதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யாவில் இருந்து வெளியேறும் மேற்கின் இடத்தை சீன நிறுவனங்கள் பிடிக்கலாம். ரஷ்ய எரிபொருள் சீன சந்தைக்குத் திரும்பலாம். அப்படி நடந்தால் யுயனின் கையிருப்பு அளவும் சீனாவின் பணப் பரிவர்த்தனை அமைப்பின் வலுவும் கூடும்.

ADVERTISEMENT

இந்த எண்ணெய், எரிவாயு விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உற்பத்தியை அதிகரிக்க ஒபேக் மறுத்துவிட்டது. எண்ணெய் சந்தையை நிலைப்படுத்த ரஷ்யாவும் சவுதியும் இணைந்து செயல்படும் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான், இராக் என அனைத்தும் ஆதரிக்க மறுத்துவிட்டன. முன்பு சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்ட இரானையும், வேனிசுவேலாவையும் சந்தைக்குக் கொண்டுவரும் வேலைகள் தொடங்கியிருக்கிறது. இரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் முயற்சி இறுதியை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில் இப்போது ரஷ்ய – இரான் வர்த்தகப் பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்காது என எழுத்துபூர்வ உறுதி வேண்டும் என ரஷ்யா கேட்கிறது. வெனிசுவேலாவை வீழாமல் காக்க சீன -ரஷ்ய நாடுகள் உணவு, பணம், படை, போர் விமானம் வரை அனுப்பின. இப்போது இவர்களின் முதுகில் வெனிசுவேலாவை குத்தவைப்பது, அவ்வளவு எளிதாக இருக்காது. இரான் இதுவரை இவர்களிடம் பட்டதை மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆதலால், அவர்கள் இந்த வலையில் விழும் வாய்ப்பும் குறைவு. சுருக்கமாக ஐரோப்பாவைத் தன் பின்னால் அணிவகுக்க வைத்த அமெரிக்காவால் ஆசிய நாடுகளை அணிவகுக்கச் செய்ய முடியவில்லை. அனைத்தும் ரஷ்ய சார்பு அல்லது நடுநிலை நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன.


**ஐரோப்பாவைப் போல ஆசியாவையும் அணிவகுக்க செய்ய…. **

இந்த ஆசிய நாடுகளை தன் பின்னால் அணிவகுக்க அடுத்தகட்ட நகர்வுகளும் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. இந்தோ – பசிபிக் குவாடு கூட்டம், அதில் தைவான் இணைய விருப்பம், அமெரிக்கப் பிரதிநிதிகள் வருகை என வேலைகள் வேகம் பிடிக்கிறது. முன்னாள் சிஐஏ தலைவரும் முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளருமான போம்பேயோ தைவானில் நான்கு நாட்கள் தங்கி, இந்தத் தீவு தனிநாடாக இருக்க வேண்டும் என உசுப்பிவிடுகிறார். போர் மேகம் ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்கு நகர்வதுபோல தெரிகிறது. இதற்கு சீனாவின் பதில் ராணுவ நடவடிக்கையாக இருக்கும்பட்சத்தில் இந்தியா இதிலும் நடுநிலை வகிக்குமா என்பது கேள்விக்குறி. இந்தியாவின் மின்னணு பொருளாதார மாற்றங்கள், அமெரிக்கத் தொழில்நுட்பத்திலும் அவர்களின் நிறுவனங்களின் முற்றுருமையில்தான் நடக்கிறது. ஜியோவின் தொழில்நுட்பம், மூலதன அடித்தளம் முகநூலும், கூகுளும்தான். இந்தியாவின் அறுநூறு பில்லியன் டாலர் கையிருப்பு இப்படி கடனாக வந்தது. எரிபொருள் விலை கூடி, பொருளாதாரம் நலிவடைந்துவரும் இந்தச் சூழலில் நிதி சந்தையில் இருந்து இவர்கள் வெளியேறினால் தொண்ணூறுகளில் இந்தியா சந்தித்த டாலர் நெருக்கடியை ஒத்த சூழலைச் சந்திக்க வேண்டிவரும்.

**குறுகிய கால வெற்றி நீண்டகால பிரச்சினைகள்… **

தற்காலிகமாக ரஷ்யாவின் ஐரோப்பிய எரிவாயு சந்தையை உடைப்பது, அவர்களை தன் பின்னால் அரசியல்ரீதியாக அணிவகுக்கச் செய்வது, பணவீக்கத்துக்குப் பகுதி அளவு தீர்வு, எண்ணெய் கும்பலின் அரசியல் ஆதிக்க உடைப்பு என அமெரிக்கா பல நோக்கங்களில் வெற்றி கண்டிருக்கிறது. ரஷ்யா உக்ரைனைக் கட்டுக்குள் கொண்டுவந்து தனது பாதுகாப்பையும் பேர வலிமையையும் தக்கவைத்துக்கொள்ள சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் வாய்ப்புகளையும் பிரச்சினைகளையும் சீனா கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. நீண்டகால நோக்கில் இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள். உதாரணமாக நாடுகள் இனி டாலர் கையிருப்பை வைத்திருக்க தயங்குவார்கள் என்கிறார் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் பாவெல். ரஷ்யாவின் நிலையைப் பார்க்கும் சீனா தன்னிடம் உள்ள இரண்டு ட்ரில்லியன் அமெரிக்கக் கடன் பத்திரங்களுக்கு மாற்றாக தங்கம் போன்ற மாற்றை நோக்கி நகரும். அதேபோல ஐரோப்பாவின் 40 விழுக்காடு எரிவாயுத் தேவையையும் உலகின் 10 விழுக்காடு எண்ணெய் தேவையையும் ஈடுசெய்யும் ரஷ்யாவைப் பதிலீடு செய்வது கடினம். உலகின் எரிபொருள் விலையேற்றம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அது உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்கிறார்கள்.

இப்போதைக்கு இந்தப் பிரச்சினைகளை வைத்து அமெரிக்கா குளிர் காய்ந்தாலும் நீண்டகால நோக்கில் பணவீக்கத்தை எப்படித் தீர்ப்பது என்பதை நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் பைடன் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.

1. அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிப்பது

2. பணக்காரர்களின் மீதான வரிவிதிப்பு

3. அமெரிக்க தொழிலாளர்களின் சம்பளத்தை மணிக்கு 15 டாலர்களாக அதிகரிப்பது

4. தொழிலாளர்கள் சங்கங்கள் வைக்க நிறுவனங்களை அனுமதிக்க வைத்து அவர்களின் பேர வலிமையைக் கூட்டுவது.

ஆக… இந்தியாவின் பாதையான அமெரிக்க நிதி மூலதனத்தை அனுமதித்து அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதி செய்து டாலரை ஈட்டி கடனை அடைத்து மூலதன வலிமையைப் பெற்று தொழிற்துறை நாடாவது என்பது போகாத ஊருக்கு வழி என்பது தெளிவாக புலனாகிறது. அப்படியே அதில் வெற்றி பெற்றாலும் ஒரு பொருளாதாரத் தடையின் மூலம் ஒட்டுமொத்த செல்வத்தையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள். இனிவரும் காலம் ஏற்றுமதி பொருளாதாரத்துக்கான காலமில்லை.

இந்தியப் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்தப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பி தீர்வுகாணும் விதமாக இந்த தேசபக்தர்கள் அவர்களுடன் ஒத்துழைத்து நம்மை ஒரு போரில் கொண்டுபோய் சிக்கவைக்கும் அபாயமும் இருக்கிறது. ஆகவே இப்போதே விழித்துக்கொண்டு நேரு கால அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்க அரசியல் அழுத்தம் கொடுத்து குறுகியகால நோக்கில் எந்த சிக்கலிலும் இந்திய உயிர்கள் பலியாவதைத் தடுப்பதும், நீண்டகால நோக்கில் இந்தியப் பொருளாதார சிக்கலை தீர்க்க மாற்றுப் பாதைகளைச் சிந்திப்பதும் நமது இன்றைய இன்றியமையாத தேவையும் கடமையாக மாறி இருக்கிறது.

**[பகுதி 1 – உக்ரைன் போரும் நவீன முதலாளித்துவ கால கொள்ளையும்!](https://minnambalam.com/politics/2022/03/07/13/Ukraine-war-and-modern-capitalistic-looting)**

**கட்டுரையாளர் குறிப்பு**

**பாஸ்கர் செல்வராஜ்**, தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share