ஏழைக்குடும்பங்களுக்கான மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை மத்திய அரசு 4 ஆக குறைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் புகையில்லா சமையல் சூழலை உருவாக்கும் நோக்கில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ (PMUY) திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தன.
இதனைத் தொடர்ந்து கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் முதல், பயனாளிகளுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 மானியம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, அந்தத் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. பின்னர், கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் இந்த மானியத் தொகை ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது.
இருப்பினும், மானியத் தொகை நீடித்த நிலையில், கடந்த ஆண்டு (2025) பயனாளிகளுக்கான மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை 12-லிருந்து 9-ஆகக் குறைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் 10.5 கோடி ஏழைக்குடும்பங்கள் பெற்று வந்த நிலையில் இந்த எண்ணிக்கை 9-லிருந்து ஆண்டுக்கு 4 சிலிண்டர்களாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் மால் கனுஜா அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.
அமைச்சகத்தின் விளக்கமும் காரணமும்:
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு இறக்குமதி செய்வதற்கான செலவு (சவூதி ஒப்பந்த விலை) சுமார் 46 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், இந்தியாவில் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகம் செய்வதற்கான உண்மையான அடக்க விலை ரூ.1,600-ஐத் தாண்டியுள்ளது.தற்போது ஜூன் 7 நிலவரப்படி சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டு, டெல்லியில் ரூ.942-க்கும், சென்னையில் ரூ.957.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு சிலிண்டருக்கும் சுமார் ரூ.700 வரை இழப்பு ஏற்படுகிறது. இந்த ஒட்டுமொத்த இழப்பைக் கட்டுப்படுத்தவே மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு உஜ்வாலா குடும்பத்தின் சராசரி ஆண்டு நுகர்வு 4 முதல் 4.5 சிலிண்டர்கள் வரை மட்டுமே உள்ளது. எனவே, பெரும்பாலான ஏழைக் குடும்பங்களின் நிஜமான சராசரி நுகர்வுக்கு ஏற்பவே இந்த எண்ணிக்கை 4 சிலிண்டர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று கூடுதல் செயலாளர் பிரவீன் மால் கனுஜா தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறையின்படி, உஜ்வாலா பயனாளிகள் தங்களின் முதல் 4 சிலிண்டர்களுக்கு மட்டும் ரூ.300 மானியம் பெற முடியும். அதன் பிறகு தேவைப்படும் சிலிண்டர்களை அவர்கள் முழு சந்தை விலைக்கே வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மாணிக்கம் தாகூர் எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை பெண்களுக்கு மோடி பரிசு..
உஜவாலா திட்டம் பாஜகவினர் மிகப்பெரிய வெற்று வாக்குறுதி இன்று அம்பலமாகறது.
2016: 12 சிலிண்டர்கள் மனியம்
கடந்த ஆண்டு: 9 சிலிண்டர்களாக குறைப்பு
இன்று: வெறும் 4 சிலிண்டர்களாக மேலும் குறைப்பு!
ஒரு ஏழை பெண் 365 நாளும் சமைக்க வேண்டும் ,மோடி அரசு வெறும் 4 முறை மட்டுமே மானியம் தருகிறது!
“சராசரி நுகர்வு 4 சிலிண்டர்தான்” என்று அரசு சொல்கிறது — உண்மை என்னவென்றால், ஏழை குடும்பஙகள் வாங்க வசதியில்லாதால் குறைவக பயன்படுத்துகின்றனர்,
தேவை இல்லாததால் அல்ல
இந்தியாவின் ஏழை பெண்களுக்கு மோடியால் இழக்கப்பட்ட துரோகம்!” என காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
