புதுடெல்லி/சென்னை:
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, “எப்படா கையில் சர்டிபிகேட் கிடைக்கும், அதை வைத்து எப்போது வேலைக்குச் சேருவது அல்லது வெளிநாடு போவது?” என்று காத்துக் கிடக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடும் செய்தி வந்துள்ளது. பட்டமளிப்பு விழா (Convocation) என்ற பெயரில் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தும் பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்களின் அவலம்:
பொதுவாக, தேர்வு முடிவுகள் வந்துவிட்டாலும், பல பல்கலைக்கழகங்களில் ‘பட்டமளிப்பு விழா’ நடக்கும் வரை ஒரிஜினல் சான்றிதழை (Degree Certificate) மாணவர்களுக்கு வழங்குவதில்லை. “விழாவுக்கு ஆளுநர் வர வேண்டும், அமைச்சர் வர வேண்டும்” என்று மாதக்கணக்கில், ஏன் சில நேரங்களில் வருடக்கணக்கில் கூட இழுத்தடிக்கிறார்கள். இதனால் வேலைவாய்ப்பு, பதவி உயர்வு மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் இழக்கும் சூழல் ஏற்படுகிறது.
யுஜிசி-யின் அதிரடி உத்தரவு:
இந்தப் புகார்கள் தொடர்ந்து வந்ததை அடுத்து, யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும் ஒரு கறாரான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில், “மாணவர்கள் தகுதி பெற்ற நாளில் இருந்து (Date of qualification), அதாவது தேர்வு முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 180 நாட்களுக்குள் (6 மாதம்) அவர்களுக்குப் பட்டச் சான்றிதழை வழங்கியே ஆக வேண்டும்” என்று திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாக்குப்போக்கு இனி எடுபடாது:
“பட்டமளிப்பு விழா நடத்துவது முக்கியம்தான். ஆனால், அதற்காகச் சான்றிதழை நிறுத்தி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 180 நாட்களுக்குள் விழாவை நடத்திச் சான்றிதழை கொடுங்கள். அப்படி விழா நடத்த முடியாத சூழல் இருந்தால், காலக்கெடு முடிவதற்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ மாணவர்களிடம் சான்றிதழைச் சேர்ப்பிக்க வேண்டும்” என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
மீறினால் நடவடிக்கை:
“இனிமேலும் சாக்குப்போக்கு சொல்லி மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடினால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மீது விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அந்தச் சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் தாமதமாவதால், மாணவர்கள் தற்காலிகச் சான்றிதழை (Provisional) வைத்துக்கொண்டு அலைவது வாடிக்கையாகிவிட்டது. யுஜிசி-யின் இந்த ‘கெடு’ உத்தரவு, பல்கலைக்கழக நிர்வாகங்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களைக் காக்க வைக்காமல், உரிய நேரத்தில் சான்றிதழ் கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
இந்த விதிமுறை அனைத்துக் கலை, அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
