“படிக்கப் போன இடத்துல ஜாதி, மதம்னு சொல்லித் ஒதுக்குறாங்களா? சீனியர் தொல்லை, பேராசிரியர்கள் பாரபட்சம்னு மன உளைச்சல்ல இருக்கீங்களா?” இனி அந்தக் கவலை வேண்டாம். கல்லூரிகளில் நடக்கும் பாகுபாடுகளை வேரோடு அழிக்க, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கையில் ஒரு பெரிய ஆயுதத்தை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ‘சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை கட்டுப்பாட்டுக் குழு’ (Equity and Diversity Control Committee) ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்று யுஜிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஏன் இந்த திடீர் உத்தரவு? சமீபகாலமாக ஐஐடி (IIT) உள்ளிட்ட இந்தியாவின் டாப் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், ஜாதிய ரீதியாகவும், மத ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாகப் புகார்கள் குவிந்துள்ளன. சிலர் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை முடிவை எடுக்கும் சோகங்களும் அரங்கேறின.
“மாணவர்கள் நிம்மதியாகப் படிக்க வேண்டும், அங்கு அரசியல் இருக்கக்கூடாது” என்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை.
கமிட்டி என்ன செய்யும்? இந்தக் கமிட்டி ஏதோ பெயருக்குப் போர்டு மாட்டி வைக்கும் அமைப்பு இல்லை. இவர்களுக்குச் சில முக்கியப் பணிகள் உள்ளன:
- கண்காணிப்பு: பட்டியலினத்தவர் (SC/ST), பிற்படுத்தப்பட்டோர் (OBC), சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் கண்காணித்தல்.
- புகார் பெட்டி: மாணவர்கள் தங்கள் குறைகளைச் சொல்லப் பிரத்யேகப் புகார் தீர்க்கும் வழிமுறையை உருவாக்க வேண்டும்.
- அதிகாரி நியமனம்: ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு ‘பாகுபாடு எதிர்ப்பு அதிகாரி’ (Anti-Discrimination Officer) நியமிக்கப்பட வேண்டும்.
யாரெல்லாம் இருப்பார்கள்? இந்தக் குழுவில் மூத்த பேராசிரியர்கள் மட்டுமல்லாது, மாணவர் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இடம் பெற வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
சட்டம் போடுவது ஈஸி… அதைச் செயல்படுத்துவதுதான் கஷ்டம்! ஏற்கனவே பல கல்லூரிகளில் ‘ராகிங் தடுப்புக் குழு’ பெயரளவுக்குத்தான் இருக்கிறது. அதுபோல இந்தக் கமிட்டியும் மாறிவிடக்கூடாது. மாணவர்களே… உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், மனசுக்குள்ளேயே வைத்துப் புழுங்காமல், தைரியமாக இந்தக் கமிட்டியில் புகார் கொடுங்கள். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. பயம் வேண்டாம்!
