உடுமலைப்பேட்டை திருமூர்த்தி மலை பகுதியில் பெய்த கன மழையால் காட்டாற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பக்தர்கள் கண்முன்னே அமலலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை அமலலிங்கேஸ்வரர் கோயிலில் ஆடிப் பெருக்கு தினமான நேற்று (ஆகஸ்ட் 3) சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அங்குள்ள அருவியில் குளித்து விட்டு பக்தர்கள் அமலலிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று மேல்மலை பகுதியில் கனமழை பெய்து வருவதாக வனத்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடும் என்பதால் குளித்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களை உடனடியாக வனத்துறையினர், கோயில் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
பிற்பகல் 2:30 மணி அளவில் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலை அடிவாரத்தில் உள்ள தோணி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோட தொடங்கியதால் கோயில் நடை உடனடியாக மூடப்பட்டது. அங்கிருந்து பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அப்போது பக்தர்கள் கண்முன்னே கோயிலை வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக சூழ ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து எச்சரிக்கை மணி ஒலிக்க விடப்பட்டது. மேலும் விசில் ஊதி கோயில் ஊழியர்கள் பக்தர்களை உடனடியாக வெளியேற்றினர். பக்தர்கள் பாதுகாப்பான இடங்களில் நின்று கோயிலை வெள்ளம் சூழ்வதை பதற்றத்துடன் பார்த்தனர்.
