ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களுக்கு உதயநிதி வைக்கும் அடுத்த செக்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்கு தொடர்பான கையெழுத்து இயக்கத்துக்காக திருமாவளவன், வைகோ ஆகியோரை சந்திக்கும் வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

ADVERTISEMENT

“திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு பக்கம் அரசுப் பணி, இன்னொரு பக்கம் திமுக இளைஞரணி மாநாட்டுப் பணிகள் என்று ரொம்பவே பிசியாகத்தான் இருக்கிறார்.

இளைஞரணி மாநாட்டுக்கு 22 குழுக்களை அமைத்து கடந்த 4 ஆம் தேதி முரசொலியில் அறிவிப்பு வெளியானது. வரவேற்புக் குழு மாநில துணைச் செயலாளர் தூத்துக்குடி ஜோயல் தலைமையிலும், நிதிக் குழு ஈரோடு பிரகாஷ் தலைமையிலும், தீர்மானக் குழு ஆனந்தகுமார் தலைமையிலும் அமைக்கப்பட்டுள்ளன. 22 குழுக்களில் இந்த மூன்று குழுக்கள் முக்கியமானதாக இளைஞரணி வட்டாரங்களில் கருதப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்த பணிகளுக்கு இடையே கடந்த 40 நாட்களாக இன்னொரு முக்கியமான பணியை தமிழ்நாடு முழுதும் செய்திருக்கிறார் உதயநிதி. ஏற்கனவே இளைஞரணிக்கு மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உதயநிதியால் நேரடியாக நேர்காணல் செய்யப்பட்டு சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டார்கள்.

ADVERTISEMENT

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவிக்கு மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் அமைச்சர்கள் பலர் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை சிபாரிசு செய்தார்கள். ஆனால் பல அமைச்சர்களின் சிபாரிசுகளை உதயநிதி ஏற்கவில்லை. இது குறித்து அப்போதே டிஜிட்டல் திண்ணையில் ‘அமைச்சர்களை அலற விடும் உதயநிதி…துரைமுருகன் சிபாரிசுக்கே இதுதான் கதி என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

இந்த நிலையில் இளைஞரணியின் ஒன்றிய அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணலைதான் கடந்த ஒரு மாதமாக நடத்தியிருக்கிறார் உதயநிதி. மாநில துணைச் செயலாளர்களாக இருக்கும் 9 பேருக்கும் அனைத்து மாவட்டங்களையும் பகிர்ந்தளித்து ஒவ்வொருவர் பொறுப்பிலும் கட்சியின் அனைத்து 72 மாவட்டங்களில் இருக்கும் ஒன்றியங்களுக்கு இளைஞரணி அமைப்பாளர் ஒருவர், துணை அமைப்பாளர்கள் ஐந்து பேருக்கான நேர்காணல் நடத்தப்பட்டு நவம்பர் 5 ஆம் தேதியோடு நேர்காணல் முடிவடைந்திருக்கிறது.

சுமார் 35 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டவர்களை மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் நேர்காணல் செய்திருக்கிறார்கள். இந்த நேர்காணல்களை பார்க்கும் மாவட்டச் செயலாளர்கள், ‘ஏற்கனவே நடந்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமனத்தில் மாசெக்களுக்கு பெரிய ரோல் இல்லாமல் போய்விட்டது. உதயநிதியே நேர்காணல் நடத்தி தேர்வு செய்துவிட்டார்.

ஒன்றிய இளைஞரணிப் பொறுப்புகளுக்காவது நம்மிடம் கேட்டு அதன்படி போடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். மாசெக்களிடம் பட்டியலும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்றிய அளவில் 40 நாட்களாக இவ்வளவு மெனக்கெட்டு நேர்காணல் நடத்தியிருக்கிறார்கள் என்றால், அதைத் தாண்டி மாவட்டச் செயலாளர்கள் கொடுக்கும் பட்டியலில் இருந்து தேர்வு செய்வாரா உதயநிதி?” என்று விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து இளைஞரணி நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘2011 இல் தளபதி இதே போல நேர்காணல் நடத்தினார். அதன் பின் மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைத்த பட்டியலில் உள்ளவர்கள் பலரையும் நிர்வாகிகளாக நியமித்தார். ஆனால் இப்போது உதயநிதியின் ஸ்டைல் வேறு மாதிரியாக உள்ளது. ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக நேர்காணல் நடத்தச் சொல்லி…ஒவ்வொரு நாளும் துணைச் செயலாளர்களிடம் நேர்காணல் விவரங்களைத் தொடர்புகொண்டு கேட்டுக் கொண்டே இருந்தார்.

இதில் மாவட்டச் செயலாளர்களும் தங்கள் பட்டியலைக் கொடுத்து வருகிறார்கள். ஆனால் 100 சதவிதம் மாசெக்கள்-அமைச்சர்கள் கொடுத்த பட்டியலை அப்படியே ஒ.கே. செய்வாரா உதயநிதி என்பது விரைவில் தெரியும். ஏனென்றால் மாவட்ட இளைஞரணி அமைப்பைத் தாண்டி…  ஒன்றிய இளைஞரணிக் கட்டமைப்பையும் புதிய இளைஞர்களால் வலிமையாக ஏற்படுத்த வேண்டும் என்று எங்களுக்கு சொல்லி வருகிறார் உதயநிதி.

எனவே இதில் அமைச்சர்களுக்கு வாய்ப்பு இருக்குமா அல்லது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் நியமனத்துக்கு அடுத்த செக் போல இது அமையுமா என்பதை உதயநிதிதான் முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையே பல மாசெக்கள் தங்கள் மாவட்டங்களில் இருக்கும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கான பட்டியலை அனுப்பிவிட்டு முதல்வர் கவனத்துக்கும் கொண்டு சென்று வருகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மெயில் ஐடி இருக்கா? வாட்ஸ்ஆப் லாக்இன் செய்யலாம்!

ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share