மைக்குன்னு நினைச்சு கண்ணாடிய பார்த்து பேசுகிறார் மோடி – உதய நிதி ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகில் உள்ள திருமலை சமுத்திரம் பகுதியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு இன்று (ஜனவரி 26) நடைபெற்று வருகிறது. திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், “தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் ஒன்றியப் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த பிரதமர் மோடி, “நம்முடைய பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று பேசினார். திரு. மோடி அவர்களே, நீங்கள் மைக் என்று நினைத்து கண்ணாடியைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

குடியரசுத் தலைவர் ஆட்சி

ADVERTISEMENT

2023 முதல் பாஜக ஆட்சியில் இருக்கக்கூடிய மணிப்பூரில் மிகப்பெரிய கலவரம் நடந்தது. அந்தப் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை நாடே பார்த்தது. ஏராளமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள். அதுமட்டுமல்ல, பாஜக ஆட்சி சரியில்லை; சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று மணிப்பூரில் ஆட்சி கலைக்கப்பட்டு ஒரு ஆண்டாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

2002ஆம் ஆண்டு, பிரதமர் மோடி, குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பெரிய கலவரம் நடைபெற்றது. அந்தக் கலவரத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். ஐந்து மாதக் கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை சங்கி கூட்டம் பாலியல் பலாத்காரம் செய்தது; குடும்பத்தையே கொலை செய்தது. அந்தக் கொடூரமான வழக்கில் குற்றவாளிகள் பக்கம் நின்றது பாஜக அரசு.

ADVERTISEMENT

காஷ்மீரில் ஆசிபா என்ற சிறுமி, உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் கிராமத்தில் இருந்த பட்டியலினச் சிறுமி எனப் பல பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்து சங்கிகள் கொலை செய்தார்கள். அந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவு குரல் கொடுத்த கேடுகெட்ட கட்சி தான் பாஜக.

வேலைக்கு செல்லும் பெண்கள்

ADVERTISEMENT

இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்லும் மாநிலம் என்று பார்த்தால் நமது தமிழ்நாடு தான். அதேபோல், இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலங்கள் என்று எடுத்துப் பார்த்தால் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் – இந்த நான்கு மாநிலங்களிலும் ஆட்சி செய்து வருவது பாஜக அரசு.

வெட்கமாக இல்லையா?

பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகளைச் செய்துவிட்டு தமிழ்நாட்டில் வந்து பெண்களிடம் ஓட்டு கேட்பது வெட்கமாக இல்லையா, திரு. மோடி அவர்களே? உங்களைப் பார்த்து தமிழ்நாட்டுப் பெண்கள் கேட்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் மகளிருக்கும் பாதுகாப்பு இருக்காது; நமது மாநிலத்திற்கும் பாதுகாப்பு இருக்காது.

நம்பர் ஒன் அடிமை

இப்போது கூட, பெண்களுக்கு பேருதவியாக இருக்கக்கூடிய 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை எப்படியாவது முடக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இவ்வளவு நாளாக நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதியை ஒதுக்காமல் இழுத்தடித்தார்கள். இன்று அந்த நிதிச் சுமையை நம்முடைய மாநில அரசு மீது திணிக்க முயற்சிக்கிறார்கள். இதையும் நம்முடைய முதலமைச்சர் தான் முதலில் எதிர்த்துக் குரல் கொடுத்தார். ஆனால், நம்பர் ஒன் அடிமை எடப்பாடி பழனிசாமி அதற்கும் ஒன்றிய அரசுக்கு முட்டுக்கொடுத்து வருகிறார்.

முரட்டு பக்தர்களைப் பார்த்திருப்பீர்கள்; முரட்டு தொண்டர்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், முரட்டு அடிமையாக நம் கண் முன்னால் நடந்து காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி.

காவல் அரண்

எப்படியாவது தமிழ்நாட்டில் நுழைந்துவிடலாம் என்று பாசிஸ்டுகள் கனவு காண்கிறார்கள். பழைய அடிமைகள் மட்டுமல்ல; இன்று புதிய அடிமைகளும் உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் கிளம்பி வரட்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தையும் நமது தமிழ்நாட்டையும் அவர்களால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அதற்கு இங்கு இருக்கக்கூடிய நம்முடைய மகளிர் படை நிச்சயம் ஒரு காவல் அரணாக இருக்கும். ஒவ்வொரு அரசுக்கும் ஒரு அடையாளம் இருக்கும்.

ஒன்றிய பாஜக அரசு என்றால் அதன் அடையாளம் பாசிசம் என்று சொல்வார்கள். முன்பிருந்த அதிமுக அரசின் அடையாளம் அடிமை அதிமுக அரசு என்று சொல்வார்கள். ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு என்ன அடையாளம் என்றால், இது முழுக்க முழுக்க மகளிருக்கான அரசு என்பதுதான். இந்த அரசு அமையக் காரணமாக இருந்தது இங்கிருக்கும் மகளிர் நீங்கள்தான். இன்று இந்த அரசை கொண்டாடிக் கொண்டிருப்பதும் இங்கிருக்கக்கூடிய மகளிர் நீங்கள்தான். ஆகவே, நமது அரசின் சாதனைகளை, திட்டங்களை, கொள்கைகளை இங்கிருக்கும் மகளிர், மக்களிடம் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும்.

நம்முடைய கழக அணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். நம்முடைய தலைவர் இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சர் பொறுப்பில் அமர வேண்டும். அதற்கு இங்கு வந்திருக்கக்கூடிய மகளிர் நீங்கள் அடுத்த சில நாட்களில் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறங்கி உங்கள் பிரச்சாரத்தை இன்னும் அதிக வேகமாகச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share