வைஃபை ஆன் செய்ததும் உதயநிதியின் கேபினட் ரேங்க் பற்றிய அரசின் அறிவிப்பு இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனை அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி. இதன் மூலம் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. என சீனியர்களை விட முந்தி துணை முதல்வர் என்ற அந்தஸ்தோடு கேபினட்டில் மூன்றாம் இடத்தை வகிக்கிறார் உதயநிதி.
2009 இல் கலைஞர் முதல்வராக இருந்தபோது ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்கினார். அப்போதும் அமைச்சரவையில் இதேபோல முதல்வர் கலைஞர், அடுத்து பேராசிரியர் அன்பழகன், அடுத்து மூன்றாவது இடத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் இடம் பிடித்தார். அதே பாணியில்தான் இப்போது துரைமுருகனின் இரண்டாம் இடத்தை அவருக்கே தக்க வைத்து, மூன்றாவது இடத்தை உதயநிதிக்கு கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஆட்சியில் எப்படி உதயநிதி முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறாரோ அதேபோல கட்சியையும் கையிலெடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார் உதயநிதி என்கிறார்கள் குறிஞ்சி வட்டாரங்களில்.
அதாவது அமைச்சரவை மாற்றம் முடிந்த பிறகு மாவட்டப் பிரிவினை, மாவட்ட சீரமைப்பு, அதன் அடிப்படையில் புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் என்று அடுத்த நகர்வுக்கு திமுக தயாராகிறது. ஏற்கனவே திமுக சட்டமன்ற தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூடி இதுகுறித்து ஆலோசனைகளை செய்தது.
ஏற்கனவே 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற கருத்து திமுகவில் விவாதிக்கப்பட்டது. ஆனால், பல சீனியர் மாசெக்கள் இதை விரும்பவில்லை. ’பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளை மேய்த்த நாங்க, வெறும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளரா?’ என்ற எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அதனால் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது.’
இந்நிலையில், இப்போது ஒரு மாவட்டத்துக்கு அதிகபட்சம் 3 சட்டமன்றத் தொகுதிகள், குறைந்தது 2 சட்டமன்றத் தொகுதிகள் என்ற அடிப்படையில் மாவட்ட சீரமைப்பு செய்யப்பட்டு பட்டியல் தயாராகிவிட்டது. மேலும், கடுமையான புகார்களுக்கு உள்ளான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பட்டியலும் தலைமையிடம் தயாராக உள்ளது.
இந்த அடிப்படையில் மாவட்ட சீரமைப்போடு கூடிய மாசெக்கள் மாற்றம், ஒன்றிய செயலாளர்கள் மாற்றம் விரைவில் நடக்கலாம் என்கிறார்கள் அறிவாலயத்தில்.
அமைச்சரவை மாற்றம் முடிந்த உடனேயே சூட்டோடு சூடாக மாசெகள் மாற்றத்தையும் அறிவிக்கலாம் என்று தலைமையிடம் திட்டம் இருந்துள்ளது. அதேநேரம் அமைச்சரவை மாற்றத்திலேயே சிலர் அதிருப்தியாக இருப்பதாக தகவல்கள் தலைமைக்கு சென்றுள்ளன.
இந்த அடிப்படையில் மாசெக்கள் மாற்றம், மாவட்ட சீரமைப்பையும் உடனடியாக அறிவிக்கலாமா அல்லது ஆறப் போடலாமா என்ற விவாதமும் நடந்திருக்கிறது. என்ன ஆனாலும் அதிக நாட்கள் ஆகாது என்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இப்போது இரு மாவட்ட அமைப்புகள் உள்ளன. கன்னியாகுமரியில் 6 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. 2 மாவட்ட அமைப்புகள் உள்ளன. விருதுநகரில் 7 தொகுதிகள் இருந்தும் 2 மாவட்ட அமைப்புகள்தான் உள்ளன.
மதுரை 10 தொகுதிகள் 3 மாவட்டச் செயலாளர்கள், சேலம் 11 தொகுதிகள் 3 மாவட்டச் செயலாளர்கள், நாமக்கல் 6 தொகுதிகள் 2 மாவட்டச் செயலாளர்கள், ராமநாதபுரம், சிவங்கை, திருவாரூர் மாவட்டங்கள் 4 தொகுதிகள் ஒரே மாவட்டச் செயலாளர் என்ற நிலையில் இருக்கின்றன. சென்னையில் சேகர்பாபுவிடம் 6 தொகுதிகள், மா.சுவிடம் 6 தொகுதிகள் இருக்கின்றன.
இந்த மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்ட அமைப்புகளில் சீரமைப்புகள், அதன் அடிப்படையில் புதிய கட்சி மாவட்டம் உருவாக்கம், அதற்கு உதயநிதியின் 100 சதவிகித ஆதரவாளர்கள் மாசெக்களாக நியமனம் என்பதெல்லாம் அடுத்து நடக்கப் போகும் அதிரடிகள் என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முடா முறைகேடு: சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு!
பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்… உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்!