கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தனித்தனி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளதால் கோவை நகரமே ஸ்தம்பித்தது. Udhayanidhi Vijay in coimbatore
கோவை குரும்பாளையம் என்.எஸ்.கே பொறியியல் கல்லூரியில் தவெகவின் பூத் கமிட்டிக் கூட்டம் நேற்று (ஏப்ரல் 26) தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று கோவை வந்தார். அவருக்கு கோவை விமான நிலையம் முதல் அவினாசி சாலை வரை தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நேற்று பூத் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் ஆலோசனை வழங்கினார். இந்தநிலையில், இரண்டாவது நாளான இன்றும் கோவை அவினாசி சாலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த விஜய், பூத் கமிட்டிக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றார்.
அதேபோல, கோவையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தார். அவரை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அங்கிருந்து அவினாசி சாலை வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் உதயநிதி ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். சாலையின் இருபுறங்களிலும் குவிந்திருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினுடன் கைகுலுக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
புதிதாக கட்சி ஆரம்பித்ததில் இருந்தே உதயநிதி ஸ்டாலினை விஜய் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்த இருவரும் கோவையில் முகாமிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Udhayanidhi Vijay in coimbatore
