“ஐடி விங் கூப்பிட்டா யூத் விங் வந்துதானே ஆகணும்” என்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Loading 2.0 Firewallz 2026 என்ற தலைப்பில், சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக ஐடி விங் நிர்வாகிகள் கூட்டம் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்,
“எப்போ ஐடி விங் நிகழ்ச்சி நடத்துனாலும் எனக்கு ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை வந்துருது. உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கும், இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு மீட்டிங்குக்கு கூப்பிட்டு இருந்தீங்க. அப்போ எனக்கு கண்ணுல இன்பெக்ஷன், அதனால கூலிங் கிளாஸ் போட்டுட்டு வந்திருந்தேன். அப்புறம் கோயம்புத்தூர்ல எம்பி எலக்ஷன்பிரச்சாரத்துல இருந்தப்போ ஒரு மீட்டிங்… அப்பவும் கொஞ்சம் டயர்டா இருந்தேன்.
ஆனா இன்னைக்கு அப்படி இல்லை. ஏன்னா, இந்த வாட்டி என்கிட்ட நீங்க தேதியே வாங்கல. இன்னைக்கு டி.ஆர்.பி. ராஜா என்னைய அழைச்சிட்டு வரல… அப்படியே இழுத்துட்டு வந்துட்டாரு! ‘தலைவர் 6 மணிக்கு வர்றாரு, அதுவரைக்கும் நீங்க வந்து பேசினா நல்லா இருக்கும்’னு சொன்னாரு. மெயின் பிக்சர் 6 மணிக்கு, நான் வெறும் ட்ரைலர் தான்!
நேத்து சாயங்காலம்தான் என்கிட்ட இந்த நிகழ்ச்சி பத்தி சொன்னாரு. காலையில ஒரு நிகழ்ச்சி, அப்புறம் என்னோட தொகுதியில ஒரு விசிட்… இதுக்கு நடுவுல இங்க வந்துட்டு போகணுமேனு வந்தேன். ஏன்னா, ஐடி விங் கூப்பிட்டா யூத் விங் வந்துதானே ஆகணும். தகவல் தொழில்நுட்ப அணி கூப்பிட்டா இளைஞர் அணி வந்தே ஆகணும்ங்கிற நிலைமையை நீங்க உருவாக்கி வச்சிருக்கீங்க. உங்களை எல்லாம் பார்க்கணுங்கிற ஆசையில தான் வந்தேன். உங்களை எல்லாம் பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று திமுக ஐடி விங் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார்.
