udhayanidhi stalin meets pm modi urge relief fund
பிரதமர் மோடி உடனான சந்திப்பின் போது வெள்ள பாதிப்பிற்கான நிதியை விடுவிக்க வலியுறுத்த உள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜனவரி 3) தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 47-வது புத்தக கண்காட்சியை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
புத்தக கண்காட்சி திருவிழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,
“இந்த முறை சிறப்பு விருந்தினராக மட்டும் நான் கலந்துகொள்ளவில்லை, பதிப்பாளராகவும் கலந்து கொண்டுள்ளேன். கடந்த ஆண்டு பொங்கல் முதல் முரசொலி பத்திரிகையில் இளைஞரணிக்கு என்று தனியாக கடைசி பக்கத்தை ஒதுக்கி பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வந்தோம். முரசொலி அறக்கட்டளைக்கு காசு கொடுத்து திமுக வரலாற்றை எழுதி வந்தோம்.
தற்போது, முத்தமிழறிஞர் பதிப்பகத்தை தொடங்கி முரசொலியில் வெளியான கட்டுரைகளை தொகுத்து 9 புத்தகங்களாக வெளியிட்டுள்ளோம். நீங்கள் அனைவரும் புத்தகங்களை வாங்குறீங்களோ இல்லையோ அட்லீஸ்ட் படிச்சிட்டாவது போகணும்.
கேலோ இந்தியா போட்டியை தமிழகத்தில் முதல்முறையாக நடத்த பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார். அவருக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக இன்று மாலை 5 மணிக்கு டெல்லி செல்கிறேன்.
‘அழைப்பிதழ் மட்டும் தான் கொடுக்கப்போறீங்களா, நிவாரண நிதியும் கேட்கப்போறிங்களானு’ பத்திரிகையாளர் நண்பர்கள் கேட்டார்கள்.
கண்டிப்பாக மரியாதையுடன் நிதியும் கேட்டுவிட்டு வருவது தான் நமது கடமை. அதனால் நேரம் கருதி, முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து செய்தியை படிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
‘தமிழ்நாட்டின் மிகப்பெரிய அறிவு திருவிழாவான சென்னை புத்தக கண்காட்சியை நேரில் வந்து தொடங்கி வைக்க இருந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணங்களினால் அது இயலாமல் போனதற்கு நான் வருந்துகிறேன்.
47-ஆவது சென்னை புத்தக கண்காட்சி நிகழ்வு மிகப்பெரிய அளவு வெற்றி பெறவும், அதிகளவிலான புத்தகங்கள் விற்பனையாகவும் நான் வாழ்த்துகிறேன்.
இன்னும் சில ஆண்டுகளில் 50-ஆவது புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இது வாசிப்பின் மீதும் அறிவுதேடலின் மீதும் பற்றுக்கொண்டு பகுத்தறிவாலும் முற்போக்கு சிந்தனையாலும் தமிழ்ச்சமூகம் முன்னோக்கி நடைபோடுவதன் அடையாளம்.
எனவே அந்த பணியை தொடர்ந்து மேற்கொண்டு வரும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சங்கத்தின் தலைவர் கவிதா சொக்கலிங்கம் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
புத்தகம் வெளியிடுவது, பதிப்பிப்பது, விற்பனை செய்வது என்பது தொழில் அல்ல, அறிவுத்தொண்டு. நம்முடைய தமிழ்நாட்டில் இத்தைய அறிவுத்திருவிழாக்கள் அதிகம் நடக்க வேண்டும்.
மனிதரின் அன்றாட பழக்கமாக வாசிப்பு பழக்கம் இருக்க வேண்டும். 47-ஆவது புத்தக கண்காட்சி பெரும் வெற்றியடையட்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக ஐடிவிங் கூட்டம் : எடப்பாடி நடத்திய மாஸ்டர்கிளாஸ்!
சென்னை புத்தக கண்காட்சி: மின்னம்பலம் ஸ்டால் 345
udhayanidhi stalin meets pm modi urge relief fund