கும்பமேளா கூட்டத்தால் சென்னை திரும்ப முடியாமல் தவித்த தமிழக மாற்றுத் திறனாளி வீரர்களை விமானத்தில் அழைத்து வர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடுகள் செய்துள்ளார். Udhayanidhi Stalin help disabled person
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் கும்பமேளாவிற்குச் சென்று புனித நீராடி வருகின்றனர்.
இதனால் வடமாநில ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகளவில் உள்ளது. பொதுப் பெட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பலரும், முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் ஏசி ரயில் பெட்டிகளில் ஏறிவிடுவதால் முன்பதிவு செய்த மக்கள் சிரமத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாரணாசியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாற்றுத் திறனாளி வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டி முடிந்த பிறகு ஊர் திரும்புவதற்காக நள்ளிரவு 1 மணிக்கு கங்கா – காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 3ம் வகுப்பு ஏசி பெட்டியில் முன்பதிவு செய்தனர். இதற்காக ரயில் நிலையத்திற்கு வந்து ரயிலுக்காக காத்திருந்தனர்.
ஆனால், ரயில் வந்தபோது மாற்றுத் திறனாளி வீரர்கள் பதிவு செய்து வைத்திருந்த ஏசி பெட்டி இருக்கைகளை பிற பயணிகள் ஆக்கிரமித்து அமர்ந்திருந்தனர். இதனால் மாற்றுத் திறனாளி வீரர்களால் தங்கள் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலின் கதவு அருகே கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் இருந்துள்ளது. ரயில் ஏற முடியாத நிலையில் ரயில் நிலையத்திலேயே இரவு தங்கினர்.
தாங்கள் சென்னை திரும்ப உதவுமாறு தமிழக அரசுக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்தனர். அதில், “கும்பமேளா நடப்பதால் ரயில்களில் அதிக கூட்டமாக உள்ளது. பொதுப் பெட்டியில் அமர்ந்து எங்களால் வர முடியாத சூழலே உள்ளது. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வாரணாசி ரயில் நிலையத்தில் தான் இன்னும் இருக்கிறோம். தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் வாரணாசியில் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாற்றுத் திறனாளி வீரர்கள் உள்பட 11 பேரை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. வீரர்களை பெங்களூரு வழியாக சென்னை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு நன்றி தெரிவித்த மாற்றுத் திறனாளி வீரர்கள், “மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு பிரச்னை என்று சொல்லி வீடியோ வெளியிட்டோம். உடனே துணை முதல்வர் எங்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர். Udhayanidhi Stalin help disabled person