மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்வது யார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Udhayanidhi Stalin condemned policy
தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இது மறைமுக இந்தித் திணிப்பு என திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதனிடையே இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்றும், தமிழக மாணவர்கள் நலன் கருதி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும், அரசியல் வேறுபாடுகளை கடந்து மாணவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டு மக்களுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்கிறோம். மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி ரூபாயை நாம் கேட்கிறோம். ஆனால், இந்த வருடம் நிதியை தர தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவே இருந்துள்ளது. எந்தக் காலத்திலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என உறுதியாக சொல்லிவிட்டோம். இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி உள்ளது? மொழிப் போரில் பல உயிர்களை இழந்த மாநிலம் தமிழ்நாடு. தமிழர்களின் கல்வி உரிமை அது. இதில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.
அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு, “அவர் குறித்து பேச விருப்பம் இல்லை” என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்.
இதேபோல அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த பேட்டியில், “புதிய கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்டீர்களா? பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இருமொழிக் கொள்கையை பின்பற்றிய தமிழ்நாடு முன்னேறியுள்ளது.
அரசுப் பள்ளியில் படித்து இரு மொழி கொள்கையை பின்பற்றியவர்களே இஸ்ரோ உள்பட அனைத்து உயர் அமைப்புகளில் பொறுப்பில் உள்ளனர். மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. மீண்டும் ஒரு மொழிப்போரை ஒன்றிய அரசு கொண்டு வந்துவிடக் கூடாது” என்று காட்டமாக தெரிவித்துள்ளார். Udhayanidhi Stalin condemned policy