தூத்துக்குடியில் ஆய்வு… கனிமொழி பங்கேற்காதது ஏன்? – உதயநிதி விளக்கம்!

Published On:

| By Selvam

கனிமொழி எம்.பி வெளிநாடு சென்றிருப்பதால், ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 14) தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார்.

அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பவகத்,  மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், இம்மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழக அரசின் எந்தெந்த திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளது? திட்டங்களை விரைவில் முடிப்பதில் ஏதேனும் சுணக்கம் உள்ளதா? என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். இந்த ஆய்வு கூட்டத்தின் முடிவுகள் முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும்.

மக்களுக்கு சீரிய முறையில் அரசின் சேவைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டோம். மேலும், பொதுமக்களிடம் பெறும் மனுக்களை கனிவுடன் பரிசீலித்து உடனுக்குடன் தீர்வுகளை வழங்குமாறு அறிவுறுத்தினோம்” என்றார்.

தொடர்ந்து கனிமொழி எம்.பி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, “அவங்கக்கிட்ட சொல்லிட்டு தான் நான் இங்க ஆய்வுக்கு வந்தேன். ஒரு அவசர வேலையா வெளிநாடு போயிருக்காங்க. அடுத்த 10 அல்லது 15 நாட்களில் மீண்டும் இங்கு வருகிறேன். அப்போது இருவரும் சேர்ந்து ஆய்வு கூட்டம் நடத்துவோம்” என்றார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கங்குவா : விமர்சனம்

உதயநிதி உடை விவகாரம் : புதிய மனுக்களை விசாரிக்க மறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share