ஆசிரியர்கள் போராட்டம்: ஊதியம் விடுவிக்கப்படும்… உதயநிதி உறுதி!

Published On:

| By Selvam

இடைநிலை கல்வி திட்டத்திற்குரிய நிதியினை மத்திய அரசு விடுவிக்காததால், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கல்வி திட்ட பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இந்தநிலையில், மத்திய அரசை கண்டித்து அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (அக்டோபர் 9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில், பள்ளி, கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-25 கல்வியாண்டுக்கு ரூ.3,585.99 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் ஒன்றிய அரசின் 60% பங்களிப்பாக அளிக்க வேண்டியது ரூ.2,151.59 கோடி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் முதல் தவணைப் பெறப்படும் நிலையில், இந்தாண்டு இத்தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 27 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களைச் சந்தித்து நிதியை விடுவிக்குமாறு நேரில் வலியுறுத்தினார்கள். ஆனாலும், ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் பெறப்படவில்லை.

திமுக அரசு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒன்றிய அரசின் நிதி பெறப்படாத நிலையிலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 32,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யப்படும். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் திமுக அரசு, அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாய் இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிக் பாஸ் – 8: டஃப் கொடுக்கும் ஆண்கள்… குழப்பத்தில் தவிக்கும் பெண்கள் அணி!

சாம்சங் தொழிலாளர்கள் கைது : நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share