கோவை ஆர் எஸ் புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.9.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30) திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைச்சக்கரம் பொருத்திய வாகனங்களை வழங்கினார். மேலும் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.152.95 கோடி மதிப்பில் முடிவுற்ற 106 பணிகளை துவக்கி வைத்து ரூ.31.72 கோடி மதிப்பில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 10,626 பயனாளிகளுக்கு ரூ.136.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள். முதல்வருக்கு கோவை மீது தனி பாசம் உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் சிறப்பாக திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். கடந்த 2021ல் முதல்வர் ஆன பிறகு ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து விடியல் பயணம் தான். இன்று வரை மகளிர் ரூ. 900 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளார்கள். இதன் மூலம் மாதம் ரூ. 1000 ரூபாய் சேமிக்கின்றனர். மேலும் அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.
மேலும் புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இந்த வருடம் மட்டும் 10 லட்சம் நவீன லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ரூ.1 கோடியே 30 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கோவைக்கு புத்தாண்டு பரிசாக நான் ரூ.10 கோடி மதிப்பில் புதிய ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்துள்ளேன். இனி சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் கோவையிலும் நடைபெறும் என கூறினார்.
