தயங்கிய உதயநிதி… விபூதி கொடுத்த துரைமுருகன் மனைவி

Published On:

| By Selvam

திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று (செப்டம்பர் 29) நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டம் முடிந்து காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை வருவதற்குள் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்ட அறிவிப்பு வெளியானது.

இந்தநிலையில், பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று உதயநிதி இன்று மரியாதை செலுத்தியிருக்கிறார். மேலும், கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் மற்றும் பேராசிரியர் இல்லத்திற்கும் விசிட் அடித்துள்ளார்.

உதயநிதியின் இந்தப் பயணம் குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்…

” துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்த அறிவிப்பு நேற்று இரவு வெளியான உடனே சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்றார் உதயநிதி. அங்கு ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ் ஆகியோர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் இன்று காலை மீண்டும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டிற்கு சென்று அப்பா, அம்மாவிடம் ஆசி பெற்றார் உதயநிதி.

அங்கிருந்து 11 மணியளவில் கலைஞர் நினைவிடத்திற்கு உதயநிதி வந்தார். அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

பின்னர் மெரினாவில் இருந்து புறப்பட்ட உதயநிதி பெரியார் திடலுக்கு சென்றார். உதயநிதி சென்ற பிறகு தான் ஆசிரியர் வீரமணி அவர் வீட்டில் இருந்து கிளம்பியிருப்பதாக தகவல் சொல்லப்பட்டது.

இதனால் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, வீரமணியிடம் ஆசி பெறுவதற்காக அரை மணி நேரம் காத்திருந்தார். இந்த இடைப்பட்ட நேரத்தில் பெரியார் திடலுக்கு வந்த செந்தில் பாலாஜி, உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார். அரை மணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்த வீரமணி, உதயநிதியை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் பெரியார் திடலில் இருந்து பேராசிரியர் அன்பழகன் வீட்டிற்கு சென்றார் உதயநிதி. அங்கு அன்பழகன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு மூன்று நிமிடத்தில் கிளம்பினார்.

கோபாலபுரம் நோக்கி உதயநிதி கார் விரைந்தது. அங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். தொண்டர்கள் வாழ்த்துகளுக்கிடையே கோபாலபுரம் வீட்டிற்குள் சென்ற உதயநிதி, கலைஞர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  பாட்டி தயாளு அம்மாளிடம் வாழ்த்தும் ஆசியும் பெற்றார். சில எம்.எல்.ஏ-க்களும், கோபாலபுரம் இல்லத்தில் வைத்து உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் சிஐடி காலனிக்கு சென்றார் உதயநிதி. அங்கு அவரின் பாட்டி ராஜாத்தி அம்மாள், அத்தை கனிமொழி ஆகியோரிடம் ஆசி பெற்றார்.

இந்த சந்திப்புக்கு பிறகு சித்தரஞ்சன் சாலையை நோக்கி மீண்டும் உதயநிதியின் கார் சென்றுகொண்டிருந்தபோது, அவருக்கு ஒரு  போன் வருகிறது. உடனே வண்டியை ஸ்லோ செய்து, அப்படியே அங்கிருந்து கோட்டூர்புரத்திற்கு விரைகிறார்.

திமுக பொதுச் செயலாளரான அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு சென்ற உதயநிதியை துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். உதயநிதிக்கு ஆசி வழங்கிய துரைமுருகனின் மனைவி, பாசத்தோடு அவருக்கு விபூதி கொடுத்தார்.

உதயநிதிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் அவரது மனம் நோகக்கூடாது என்பதற்காக தயங்கியபடியே விபூதியை வாங்கிக்கொண்டு நெற்றியில் பூசினார். இந்த சந்திப்பு ஐந்து நிமிடங்கள் வரை நடந்தது.

பின்னர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்திற்கு உதயநிதி சென்றார். அங்கு திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் நேரு, போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் உதயநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த சந்திப்புகளுக்கு பிறகு அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கிண்டி ராஜ்பவன் விரைந்தார் உதயநிதி.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஈரானில் இருந்து போட்டு கொடுத்த ஸ்பை… பகை முடித்த இஸ்ரேல்

கும்பகோணம் கல்லூரி முதல் கோட்டை வரை… யார் இந்த அமைச்சர் கோவி செழியன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share