தவெக அரசு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், ‘ஸ்கேம்’ (SCAM) செய்திருப்பதாகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தது.
ஆனால், தவெக அரசு தற்போது, ரூ.50,000 வரை மட்டுமே கடன் பெற்றிருக்கும் குறு விவசாயிகளுக்கு முழுமையாக (100%) கடன் தள்ளுபடி செய்யப்படும் என உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
“பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.
ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?” என தெரிவித்துள்ளார்.









