விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், திமுக தான் தனது அரசியல் எதிரி என்றும் திராவிட மாடல் என்ற பெயரில் மக்கள் விரோத அரசு செயல்படுகிறது என்றும் விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார்.
விஜய்யின் விமர்சனத்திற்கு வாழ்க வசவாளர்கள் என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார். இந்தநிலையில், திமுக என்பது யாராலும் அசைக்க முடியாத இயக்கம் என்று திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 7) விஜய்க்கு மறைமுகமாக பதிலளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு கோனேரிராஜபுரம் கருப்பூரில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் திருவுருவச்சிலைகளை உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய உதயநிதி, “கடந்த மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. திமுகவின் மூன்றரை வருட ஆட்சிக்கு மக்கள் கொடுத்த சான்றிதழ் தான் அந்த வெற்றி. அந்த வெற்றியை விட மிக மிக முக்கியமானது இன்னும் ஒன்றரை வருடங்களில் நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தல்.
ஏற்கனவே நம்முடைய தலைவர் ஸ்டாலின் முப்பெரும் விழாவில் சொன்னதைப் போல, குறைந்தது 200 சட்டமன்ற தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு திமுக ஆட்சியின் சாதனைகளை தொண்டர்களாகிய நீங்கள் வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.
அதிமுகவில் பல அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை. யார் யாரோ புதிதாக வந்து நம்மை விமர்சனம் செய்கிறார்கள். திராவிட மாடல் அரசு என்றால் என்ன என கேட்கிறார்கள். மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். மக்களிடம் போய் கேளுங்கள். திராவிட மாடல் அரசு என்றால் என்ன என அவர்கள் கூறுவார்கள்.
திமுக என்பது யாராலும் அசைக்க முடியாத ஒரு இயக்கம். எப்பேர்ப்பட்ட புயலையும் தாங்கக்கூடிய இயக்கம் திமுக. ஆனால் சிலர் திமுக என்ற ஆலமரத்தை வெட்ட பிளேடுகளை எடுத்து வருகிறார்கள். இதெல்லாம் சாத்தியமா? அவர்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஒரே பதில், 2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஸ்டாலினை முதல்வர் பதவியில் உட்கார வைப்பது தான் எங்களுடைய ஒரே லட்சியம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…