திமுகவில் ஒவ்வொரு மாவட்டமாக பொது உறுப்பினர் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டங்களில் வெளிப்படுத்தப்படும் கருத்துகள் மினிட்ஸ் புத்தகத்தில் ஏற்றப்பட்டு கட்சித் தலைமைக்கு மாவட்டச் செயலாளர்களால் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், திமுகவின் இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதுவும் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று ஈரோடு தெற்கு மாவட்ட பொது உறுப்பினர் கூட்டத்தில் அனைவரது கரவொலியுடன் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை வைத்தவர் யார் தெரியுமா? இளைஞரணி மாநில துணைச் செயலாளரும், ஈரோடு தொகுதி எம்.பி.யுமான பிரகாஷ் தான்.
மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி முன்னிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம் நேற்று (செப்டம்பர் 11) மாலை மேட்டுக் கடை பகுதியில் தனியார் அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய எம்.பி.யான ஈரோடு பிரகாஷ்,
“வருகிற சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக நமது இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான அண்ணன் உதயநிதி அவர்கள், கொங்கு மண்டலத்தில் போட்டியிட வேண்டும். அதுவும் குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
நடந்து முடிந்த எம்பி தேர்தலில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதியான மொடக்குறிச்சியில் 67 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அண்ணன் உதயநிதி கொங்கு மண்டலத்தில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்பதை உங்கள் (கட்சி நிர்வாகிகள், பொது உறுப்பினர்கள்) சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்று கூற கூட்டத்தில் இருந்து பலத்த கரகோஷம் எழுந்தது.
நிறைவாக பேசிய மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான முத்துசாமியும் ஈரோடு பிரகாஷின் கோரிக்கையை நான் வரவேற்கிறேன் என்று கூறினார்.
கொங்கு மண்டலம் அதிமுக பலம் மிகுந்த பகுதியாக அறியப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல்களில திமுக கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றாலும் சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவுக்கு சாதகமான முடிவை கொங்குமண்டலம் வழங்குவதில்லை.
இந்த நிலையில் உதயநிதியை கொங்கு மண்டலத்தில் போட்டியிட வேண்டும் அவருக்கு நெருக்கமானவரான ஈரோடு பிரகாஷின் பேச்சு பற்றி அவரிடமே பேசினோம்.
“கொங்குமண்டலத்தில் 61 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கே திமுக வெற்றி பெற வேண்டியது இப்போது கட்டாயத் தேவையாகியிருக்கிறது. அதிமுகவின் முக்கிய தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி போன்றோர் இயல்பாகவே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் கொங்கு மண்டலத்தில் அதிமுக ஆக்டிவ் ஆக இருப்பதாக ஒரு தோற்றம் இருக்கிறது.
இன்னும் சொல்லப் போனால் 1991 இல் அப்போதைய முதலமைச்சர் வேட்பாளரான ஜெயலலிதா கொங்குமண்டலம் காங்கயத்தில் போட்டியிட்டார். ஜெயலலிதாவே கொங்கு மண்டலத்தில் போட்டியிடுகிறார் என்றதும் கொங்கு பகுதியில் அதிமுகவினரின் பணிகள் வேகமாகவும் உற்சாகமாகவும் இருந்தன.
இந்நிலையில் இப்போது கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றி என்பது மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. அதனால்தான் எங்கள் வருங்கால தலைவரான அமைச்சர் உதயநிதி, கொங்குமண்டலத்தில் போட்டியிட்டால் திமுக எழுச்சி பெறும் என்ற நோக்கத்தில்தான் அவ்வாறு பேசினேன். கொங்கு மண்டலத்தில் குறிப்பாக எங்கள் ஈரோடு மாவட்டத்தில் உதயநிதி போட்டியிட்டால் நாங்கள் பெரிதும் மகிழ்வோம்” என்றார் ஈரோடு பிரகாஷ் எம்.பி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–வேந்தன்
சீதாராம் யெச்சூரி மறைவு : தலைவர்கள் இரங்கல்!
சிம்புவுக்கு நன்றி சொன்ன பவன் கல்யாண்! பின்னணியில் தாராள குணம்