’டிரைவர் கூட இல்லாமல் எடப்பாடி தனியே வருவார்’ : உதயநிதி அட்டாக்!

By Kavi

|

Published on 10 Sep 2025, 4:14 PM

அதிமுகவை பாஜக அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிமுகவில் அனைவரும் ஒன்றியணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியது, அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியது, செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் பேசுவது, செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்து பேசியது என அதிமுகவுக்குள் சூறாவளி புயல் வீசிக்கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

எனினும் தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக கடுமையாக விமர்சித்து வருகிறார்.

திமுக வெண்டிலேட்டரில் தான் இருக்கிறது என்று நேற்று முன் தினம் கள்ளக்குறிச்சியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசியிருந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 10) செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மூன்று மாதங்களாக எடப்பாடி பழனிசாமி பஸ்ஸிலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு, அவர் ரோட்டில் நின்று பேச்சிக்கொண்டிருக்கும் போது பொதுமக்கள் அவசர தேவைக்காக ஆம்புலன்சில் வந்தார்கள். அந்த ஆம்புலன்ஸை நிறுத்தி மிரட்டினார் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இப்படி பேசலாமா. மனிதாபிமானம் இருப்பவர்கள் இப்படி பேசுவார்களா…

ஆனால் நமது தலைவர், ஆம்புலன்ஸ் வந்தால்… அதற்கு வழிவிட்டு, வண்டி சென்ற பின்னரே பேச்சை தொடங்குவார். ஒரு தலைவர் என்றால் அப்படி இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி மாதிரி இருக்கலாமா?

அவருடைய கட்சியே இன்று ஆம்புலன்ஸில் செல்வது போல இருக்கிறது. அதோடு ஐசியுவில் நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள். நீங்கள் என்றால் உங்களை சொல்லவில்லை. அதிமுகவை சொன்னேன். கடைசியில் உங்களை காப்பாற்றும் மருத்துவராக எங்கள் தலைவர் தான் வருவார்.

அதிமுக பொதுச்செயலாளராக நிரந்தரமாக நீங்கள் தான் இருக்க வேண்டும். நீங்கள் மட்டும்தான் இருக்க முடியும். அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது. எங்களுக்கு வேலை சுலபமாக இருக்கும். அந்த இயக்கத்தை நடத்துவதற்கு உங்களுக்கு மட்டும்தான் தகுதியிருக்கிறது.

நான் உங்களுக்கு முன்மொழிகிறேன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக இருக்க வேண்டும்.

அதிமுகவினர் இரண்டு பேர் சந்திக்கும் போது பேசிக்கொள்ளமாட்டார்கள். திருதிருவென முழிப்பார்கள். யார் காலை யார் வாரிவிடலாம் என்று நினைப்பார்கள். அதுதான் போட்டியே.

இவர் எந்த அணி, ஓபிஎஸ் அணியா…டிடிவி அணியா… இல்லை சசிகலா அம்மா அணியா, தீபா அணியா, தீபாவின் டிரைவர் அணியா இல்லை புதிதாக வந்திருக்ககூடிய செங்கோட்டையன் அணியா… இவர்கிட்ட பேசலாமா வேண்டாமா? நாளைக்கு எந்த அணியில் இருப்பார்… என்ற குழப்பத்தில் இருப்பார்கள்.

ஆனால் எத்தனை அணியாக இருந்தாலும் பாஜக குடைக்குள் வந்துவிட்டோம் என்று தெளிவாக அதிமுகவினர் புரிந்துகொண்டனர்.

இப்படிபட்ட நிலைமை எந்த இயக்கத்துக்கும் வரக்கூடாது.

தமிழகத்தை மீட்போம்… மக்களை காப்போம் என எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்துக்கு போகிறார். இவர் முதலில் அதிமுகவை பாஜகவிடம் இருந்து மீட்க வேண்டும். ஜெயலலிதா இறந்த பிறகு இந்த கட்சியை அடகு வைத்துவிட்டீர்கள்.

அதிமுகவை கூறுபோட்டு பாஜக விழுங்கிக் கொண்டிருக்கிறது. இன்று இரண்டாவது சுற்று பிரச்சாரத்துக்கு போயிருக்கிறார். திரும்பி வரும்போது தனியேதான் பஸ்ஸில் வருவார். டிரைவர் கூட இருப்பாரா என்று தெரியவில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel