Udhayanidhi assures youth wing members
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக இளைஞர் அணியினருக்கு நிச்சயமாக வாய்ப்புகள் பெற்றுத் தருவேன் என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு பாராட்டும் நன்றியும் தெரிவிப்பதற்காக… மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டத்தை நேற்று (ஜனவரி 26) மாலை சென்னையில் கூட்டி இருந்தார் உதயநிதி.
இது குறித்து மின்னம்பலத்தில் மாநாடு முடிந்து உதயநிதி கூட்டும் திடீர் இளைஞரணிக் கூட்டம்! எதற்காக? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படியே சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லமான குறிஞ்சி இல்லத்தில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று மாலை 3 மணி முதல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உதயநிதியின் குறிஞ்சி இல்லத்துக்கு வரத் தொடங்கினர். மாலை 4 மணிக்கு கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் உதயநிதி வருவதற்கு 5.45 ஆகிவிட்டது.
ஜோயல் உள்ளிட்ட மாநில துணை செயலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஒவ்வொரு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு மாநாட்டு வெற்றிக்காக ‘கையடக்க டேப்’ ஒன்றை பரிசளித்தார் உதயநிதி.
இது நன்றி தெரிவிக்கும் ஒன்று கூடல் என்றாலும் இதையும் ஒரு ஆலோசனைக் கூட்டமாகவே நடத்தி இருக்கிறார் உதயநிதி.
இந்த கூட்டத்தில் பேசிய மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஈரோடு பிரகாஷ், “பல பேர் இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கூறுகிறார்கள். ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன. அரசு நிர்வாகத்தில் எப்படி உங்களுக்கு முக்கியத்துவம் அதிகமாக அளிக்க வேண்டுமோ, அதே போல கட்சி நிர்வாகத்திலும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
அந்தவகையில் தாய்க் கழகத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரங்களை உங்களால் இன்னும் எளிதாக பெற்றுத்தர முடியும். எனவே தாய்க் கழகத்திலும் இளைஞர் அணிச் செயலாளருக்கு முக்கிய பதவி அளிக்கப்பட வேண்டும்” என்று பேச அனைத்து மாவட்ட அமைப்பாளர்களும் கைதட்டி வரவேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி, “இந்தியாவை திரும்பிப் பார்க்க வைக்கிற வகையில் வெற்றிகரமாக இந்த மாநாட்டை நடத்தி இருக்கிறோம். அதற்கு உங்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்க தான் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம்.
மாநாட்டை வெற்றிகரமாக முடித்ததோடு நமது கடமை ஓய்ந்துவிடவில்லை. இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர் அணியை சேர்ந்தவர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பை நிச்சயம் நான் பெற்று தருவேன். தேர்தல் களத்தில் உழைக்கத் தொடங்குவோம்” என்று பேசியிருக்கிறார் உதயநிதி.
ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல் என்று அசைவ விருந்து அளித்து நிர்வாகிகளுடன் சாப்பிட்டார் உதயநிதி.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கடலூர்: விசிக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வேன் விபத்து.. 3 பேர் பலி!
எங்க அப்பா சங்கி இல்லை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
Udhayanidhi assures youth wing members