திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் நாளை (டிசம்பர் 13) திருவண்ணாமலையில் நடைபெறுகிறது. இதில் 1 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 13) இரவு நிகழ்ச்சி நடைபெறும் இடமான வாணியந்தாங்கலுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சென்றடைந்தார்.
அவரை நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார்.
தொடர்ந்து இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல கூட்டம் நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடுகள் தொடர்பாக அவர் ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின்.
இதற்கிடையே அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்து இந்த கூட்டம் தொடர்பாக விளக்கமளித்தார்.
அவர் கூறுகையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி சார்பாக வடக்கு மண்டலத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. வடக்கு மண்டலம் என்பது சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
அண்ணா காலத்திலிருந்தே தாய் கழகத்திற்கு கிராம அளவில் கிளைகள் இருப்பது போல, தற்போது இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணியை வாக்குச்சாவடி அளவில் நிர்வாகிகளை நியமித்து பலப்படுத்தியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி, முதலமைச்சர் மூலமாக அறிவுரை பெற வேண்டும். மேலும், இளைஞர் அணி தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
பொதுச்செயலாளர் துரைமுருகன் முதற்கொண்டு, தாய் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
வடக்கு மண்டல நிர்வாகிகளைச் சந்திக்கும் இந்த வாய்ப்பை, முதலமைச்சரின் வாழ்த்துகளுடன், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு வழங்கியுள்ளார்.
இந்த கூட்டத்தை நடத்துவதற்காகக் காவல்துறை அதிகாரிகளிடம் கடிதம் கொடுக்கப்பட்டபோது, அவர்கள் 17 நிபந்தனைகளை விதித்து, அதனை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக நலப்பணித் துறை, தீயணைப்புத் துறை, மாநகராட்சித் துறை, பொதுப்பணித் துறை (மின்துறை உட்பட), வானிலை சோதனைத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை என ஏழு துறைகளிடம் தடையில்லாச் சான்றிதழ்கள் (NOC) பெறப்பட்டுள்ளன.
இன்று காலை வரை இதற்கான அத்தனை வேலைகளையும் செய்திருக்கிறோம்.
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, மருத்துவப் பிரிவு , மாநகராட்சி ஆணையாளர் (கழிப்பறை/குடிநீர்), மின் பொறியாளர் போன்ற அதிகாரிகள் அனைவரும் நிகழ்விடத்தை ஆய்வு செய்து, எந்தவித அசம்பாவிதமும் இன்றி கூட்டத்தை நடத்த முடியும் என்று சான்றிதழ்களை வழங்கினர்.
கூட்டம் நடைபெறும் இடம் சுமார் 150 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 1 லட்சத்து 30 ஆயிரம் நிர்வாகிகள் ஒன்றுகூட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
2,700 பேருந்துகள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட வேன்கள் மற்றும் கார்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவசர காலத்தில் மருத்துவம் செய்ய, இரண்டு சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், முதலுதவி, அறுவை சிகிச்சை, இருதய சிகிச்சை, எலும்பு மருத்துவம் உட்பட அனைத்துப் பிரிவுகளும் உள்ளன. இதனை வழிநடத்த 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் காலை முதல் பணியாற்றுவார்கள்.
500 இடங்களில் கழிப்பறைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 500 தன்னார்வலர்கள் சமூக நோக்கங்களுடன் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சமூக நோக்கங்களை கொண்டவர்கள். அருணை தூய்மை அமைப்பைச் சார்ந்தவர்கள்.
இதுமட்டுமின்றி 10 பொருட்கள் அடங்கிய கிட் ஒவ்வொரு சேரிலும் வைக்கப்படும். அதில் முந்திரி, தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.
பொதுவாகச் சாலைகள் அல்லது தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்டங்கள் நடத்தினால், பொதுமக்களுக்குப் போக்குவரத்துத் தடையால் சிரமம் ஏற்படும். அதனால் விமர்சனம் வரும் என்பதை உணர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த இடத்தைத் தேர்வு செய்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் ஒரு வழிப்பாதை இல்லை. மூன்று வழிப்பாதைகள் உள்ளன. ஒன்று மாநிலங்கள் வழியாகவும், மற்றொன்று பள்ளிகள் வழியாகவும், இன்னொன்று மரப்பாம்பாடி வழியாகவும் வருகின்றன. இந்த மூன்று பாதைகளிலும் வாகனங்கள் வருவதற்கும் போவதற்கும் எதிர்வழிப் பாதைகள் உள்ளன.
ஆளும் கட்சி என்கிற காரணத்தினால் நாங்கள் எந்தவித விதிமுறைகளையும் மீறவில்லை. காவல்துறை சொன்ன அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியுள்ளோம்.
இளைஞரணியினர் அனைவரும் வெள்ளை பேண்ட், வெள்ளை டீ-சர்ட் என்ற சீருடையோடு கூட்டத்தில் பங்கேற்பார்கள்” என்று கூறினார்.
