ஆதவ் அர்ஜூனா வைத்த கோரிக்கை: நிறைவேற்றிய உதயநிதி

Published On:

| By Aara

விளையாட்டுச் செய்தி ஒன்று  நம் காதில் வந்து விழுந்தது. ஆனால், விசாரணைக்குப் பின் அது அரசியல் செய்தியானது.

வருகிற நவம்பர் 22, 25 தேதிகளில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்திய கூடைப் பந்து கழகம் ஏற்பாட்டில்  ஆசிய கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளை நடத்த இருக்கிறது. இந்த போட்டிகளில் கத்தார், கசகஸ்தான் நாட்டு அணிகள் இந்திய கூடைப் பந்து அணியோடு விளையாட இருக்கின்றன.

இந்த விளையாட்டுச் செய்தி எப்படி அரசியல் செய்தியானது என்றால்  இந்திய கூடைப் பந்து சம்மேளனத்தின் தலைவராக இருப்பவர் விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா.  தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.

திமுக கூட்டணியில் விசிகவை மையமாக வைத்து எழும் சர்ச்சைகளுக்கு  தொடர்ந்து வித்திடுபவர் ஆதவ் அர்ஜுனா என்று திமுக தரப்பில் தொடர்ந்து  முன் வைக்கப்படுகிற வாதம். இதை விசிகவுக்கு உள்ளேயும்  சொல்கிறார்கள்.

”நான்கு வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்தவர் துணை முதல்வராகுபோது நாற்பது வருடங்களாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வராகக் கூடாதா?” என்று ஒரு பேட்டியில்  ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியிருந்தார். இது உதயநிதியை நேரடியாக டார்கெட் செய்வதாக இருந்தது.

எந்த அளவுக்கு என்றால் திமுக துணைப் பொதுச் செயலாளரான  ஆ.ராசா,  “விசிகவில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர், கொள்கை புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அறனுக்கு, அரசியல் அறத்துக்கு ஏற்புடையது அல்ல. இது போன்ற குழப்பத்தை விளைவிக்கின்ற, பாஜகவிற்கு துணை போகிறார்கள் என்று எண்ணக் கூடியவர்கள் மீது திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று  முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஈரோட்டில் இருந்தபடி ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசினார். ஆனால், இந்த நாள் வரை திருமாவளவன் தனது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் விகடன் பிரசுரமும் இணைந்து நடத்தும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில்தான் திருமாவும் விஜய்யும் பங்கேற்க இருக்கிறார்கள். எனவே திமுக – விசிக கூட்டணி நெருடல் ஏற்படும் போதெல்லாம் அதற்கு ஆதவ் அர்ஜுனாவே தொடர் காரணமாக இருக்கிறார் என்ற பேச்சும் எழுந்தது.

இந்த பின்னணியில்தான் ஆதவ் அர்ஜுனா தலைவராக இருக்கும் இந்திய கூடைப் பந்து சம்மேளனத்தின் சார்பில் ஆசியக் கோப்பை தகுதிப் போட்டிகள் நேரு உள் விளையாட்டு அரங்கில் நவம்பர் 22, 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன.

விளையாட்டுத் துறை வட்டாரத்தில் நாம் பேசியபோது, “ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் உள் விளையாட்டுகள் சமீப காலங்களாக பேசுபொருளாக மாறிய நிலையில்,  இந்த நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஏனென்றால்  2011-15 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இதேபோல நேரு உள் விளையாட்டு அரங்கில்  ரிலையன்ஸ் ஏற்பாட்டில்  ரஜினி உள்ளிட்டோர் ஃபுட்பால் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சி பற்றிய அழைப்போ,  அனுமதியோ அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் முறைப்படி வைக்கப்படவில்லை.

நிகழ்ச்சிக்குப் பின்னரே இதைத் தெரிந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை உடனடியாக மாற்றிவிட்டார். இப்படி நேரு உள் விளையாட்டு அரங்குக்கும், அரசியல் உள் விளையாட்டுகளுக்கும் உள்ள தொடர்பை கூறும் சம்பவங்கள் நிறைய உண்டு.

இந்த பின்னணியில் ஆதவ் அர்ஜுனா தலைமையிலான கூடைப் பந்து கழக விழாவுக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் அனுமதி கிடைக்காது என்று சில அதிகாரிகள் மத்தியில் பேச்சு எழுந்தது.

ஆனால்,  இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை ஆக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வரும் துணை முதல்வர் உதயநிதி,  மற்ற விளையாட்டுகளைப் போலவே கூடைப் பந்து விளையாட்டையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விழாவையும் பார்க்கிறார்.  இதில் வேறு எந்த அரசியலையும் அவர் பார்க்கவில்லை” என்றனர்.

ஆதவ் அர்ஜுனா தரப்பில் விசாரித்தபோது, ‘தமிழக அரசின் அனுமதியோடுதான் சர்வதேச கூடைப் பந்து விளையாட்டுப் போட்டி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு முறைப்படி  அழைப்பு விடுத்திருக்கிறோம்’. விளையாட்டுத் துறை அமைச்சரான  துணை முதல்வரும் வருவார் என்று எதிர்பார்க்கிறோம்”  என்கிறார்கள்.

ஆரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயநிதி உடை விவகாரம் : புதிய மனுக்களை விசாரிக்க மறுப்பு!

திரையில் மிகச்சாதாரண மனிதன்… யதார்த்த நடிப்புக்கான சமகால உதாரணம் – காளி வெங்கட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share