மாணவர்களிடம் பிஸ்கெட் கொடுத்து மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்குவதா என துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளனர். Udhayanidhi Anbil Mahesh condemn to bjp
மத்திய பாஜக அரசின் மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக, ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கியது. ஒரே நாளில் 1.5 லட்சம் கையெழுத்துகளை வாங்கியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்த நிலையில் சென்னை காரப்பாக்கத்தில் பா.ஜ.க.வினர் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக இன்று (மார்ச் 7) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “குழந்தைகளிடம் கையெழுத்து வாங்குவது தவறு. நாங்களும் ஒரு கோடி கையெழுத்து வாங்கினோம். ஆனால் பள்ளி மாணவர்களை தவிர்த்துதான் வாங்கினோம். ஏற்கனவே மிஸ்டு கால் கொடுத்து ஒரு கோடி பேரை சேர்த்தார்கள். அதன் தொடர்ச்சியதாகத் தான் இதை பார்க்கிறேன்” என்று கூறினார்.
திருவள்ளூரில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “மாணவர்கள் தாங்களாகவே முன் வந்து இது போல மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பம் போட்டால், அதனை நாங்கள் தடுக்கமாட்டோம். ஆனால், கையொப்பம் போடுவதற்கு விருப்பம் இன்றி, பள்ளிக்கு செல்லும் மாணவர்களை தடுத்து இழுத்து கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்குவது மாணவர்களை மிரட்டுவதற்கு சமமானதாகும். துறையின் அமைச்சர் என்ற வகையில் நான் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சில இடங்களில் மாணவர்களுக்கு பிஸ்கட்கள் வழங்கி அவர்களை அழைத்து வந்து கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே அப்படி நடைபெற்ற இடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அந்தந்தப் பகுதி காவல்துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாக சொல்லி இருக்கின்றனர். அப்படி புகார் அளிக்கும்பட்சத்தில் அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். Udhayanidhi Anbil Mahesh condemn to bjp