நிலவளம் கு.கதிரவன்
“ஏழ்பாரும் உய்ய எதிராசர் உதித்தருளும், சித்திரையில் செய்ய திருவாதிரைத் திருநாளே, மண்ணுலகில் வாழும் நமக்கெல்லாம் வாழ்வான நாள்” என்ற மணவாள மாமுனிகளின் திவ்ய கூற்றுப்படி, கி.பி 1017ஆம் ஆண்டு சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஸ்ரீமத் ராமானுஜர்.
சங்கரர் வாழ்ந்த இரண்டு நூற்றாண்டுக்குப் பிறகும், மத்வாச்சார்யார் காலத்துக்கு 60 ஆண்டுகள் முன்பாக வாழ்ந்து, மத நல்லிணக்கத்துக்கும், சமய நல்லிணக்கத்துக்கும் பெரும் முயற்சிகள் மேற்கொண்டு சீர்திருத்தப் பணிகள் செய்தவர். எம்பெருமானார் அவதரிப்பதற்கு முன்னர் பற்பல மாய மதத்தவர்கள் இவ்வுலகில் மலிந்து, வேதங்களுக்குப் புறம்பான மாயாவாத கருத்துகளைப் பரப்பிக் கொண்டிருந்த நிலையில், ராமானுஜரின் அவதரிப்பால் “நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது” என்றார் திருவரங்கத்தமுதனார்.
அன்றியும், இவ்வுலகில் கலிபுருஷன் நெடு நாளாகச் செங்கோல் கொண்டு தனது பராக்கிரமமே ஓங்கி வளருமாறு அரசாட்சி புரிந்து வந்தான். எம்பெருமானார் திருவதரித்தவன்றே “கலியுங்கெடுங் கண்டு கொண்மின்” என்ற நம்மாழ்வாரின் திருவாக்குப்படி, இறந்தது வெங்கலி என்று இப் புவியோர் இன்புற்றனர்.
ஸ்ரீராமானுஜர் என்னும் சொல் ஸ்ரீராமபிரானுடைய தம்பியென்னும் பொருள் கொண்டதாகும். தசரத சக்கரவர்த்தியின் மகனான ராமபிரானுக்கு இளையோனாக அவதரித்த லக்ஷ்மணன் என்ற பொருளில் இவர் லக்ஷ்மண முனி என்று அழைக்கப்படுகிறார். லக்ஷ்மணன் எப்படி ராமபிரானுக்கு இடையீடின்றிக் கைங்கரியமே பொழுது போக்காக இருந்தது போல, உடையவரும், கைங்கர்யத்தையே பெருஞ் செல்வமாகக் கொண்டிருக்கப் போகிறார் என்பதை அவதார சமயத்திலேயே யோக திருஷ்டியினால் அறிந்து திருமலைநம்பி அவர்கள் இவருக்கு ஸ்ரீராமானுஜன் என்று பெயரிட்டருளியதாக பூர்வாசிரியர்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீமத் ராமானுஜர் அவதரித்த காலம் வைஷ்ணவத்துக்கு மிகவும் நெருக்கடியான காலமாகும். புத்தரின் கருத்துகள், சங்கரரின் அத்வைத கருத்துகளுக்கு மாற்றாக தமது கருத்தினை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டிய அவசியமான காலகட்டம் அது. புத்தரின் கொள்கைகளின் உள்ளடக்கத்தை அறிந்தவரையில் அவர் எல்லோரையும் சமமாகவே நடத்தியிருப்பார் என்று அனுமானிக்கலாம். ஆனால் ராமானுஜர் சம்பந்தப்பட்ட வரையில் அவர் அனைவரையும் சமமாகக் கருதினார் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் நிறைய உள்ளன. சமூகத்தில் கீழ் நிலையில் உள்ள சாதியினரை தன் குருவாக ராமானுஜர் ஏற்றுக் கொண்டார் என்பதே அவரது பரந்த மனப்பான்மைக்கு நல்ல எடுத்துக் காட்டாகும்.
சங்கரருடைய எழுத்துகள் ஆழ்ந்த தர்க்க இயல் அடிப்படையில் அமைந்தது. அத்வைத வேதாந்தம் தீவிர தத்துவார்த்தப் போக்கு உடையது. இந்த நிலையில் வைணவம், குறிப்பாக பக்தி இயக்கம் தெய்விகக் காதல் என்று குறிப்பிடும் இயக்கம் ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகவும், வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகவும் வளர்ந்தது. ராமானுஜர் காலத்தில் தென்பகுதியை ஆண்ட மன்னர்கள் பலர் ஒரு குறிப்பிட்ட சமயத்துக்கு ஆதரவு அளித்து வந்தனர். அறிவார்ந்த மக்கள் மத்தியில் வைதீக மதம், வடமொழி மந்திரத்தை உச்சாடனம் செய்வதன் மூலம் பெரும் பிரமிப்பையும், கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் மனோபாவமும் இருந்தது. அங்கீகாரம் பெற ஆலயங்களுக்கு ஏராளமான நிதியை வாரி வழங்கினர். சாமானிய மக்கள் நெருங்க முடியவில்லை. கேள்வி கேட்க முடியவில்லை. முக்கியமாக பிரபஞ்சம் பற்றிய உண்மைகள், விதிமுறைகள், ஞான மார்க்கத்திற்கான வழிமுறைகளையே பேசியது. சமூகப் பொருளாதார சிந்தனைகள் பற்றி கவலைப்படவில்லை.
இந்த நிலையில்தான் வைணவம் தன்னுடைய எளிய போதனைகளாலும், ஞானத்தை விட பக்தி முக்கியமானதென்று கூறியதாலும் பெரும் அளவிலான மக்கள் அதைப் புரிந்து கொண்டனர். வைணவ சமயத்தின் செல்வாக்கு அவர்கள் மத்தியில் வேகமாக வளர்ந்தது. ஆழ்ந்த கல்வியறிவு இல்லாதவர்களுக்கு இறைவனிடம் காட்டும் தூய அன்பு மட்டுமே மோட்சத்துக்கு வழிகாட்டுமென்ற கருத்து பெரும் அளவிலான மக்களைக் கவர்ந்தது. வைணவத்தின் முக்கிய செய்தியான “கருணை” மேல்தட்டு மக்களையும், பெரும் அளவிலான மற்ற பகுதி மக்களையும் ஒன்றுபடுத்த முடிந்தது. இவற்றையெல்லாம் வழி நடத்திச் சென்றவர் ஸ்ரீமத் ராமானுஜர்.
ஆளவந்தாரின் கடைசிக் கால மனக்குறைகளான வியாச பராசரர் பெயரை நமது பிள்ளைகளில் தக்கவருக்குச் சூட்ட வேண்டும், மயர்வற மதிநலம் அருளப்பெற்ற நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு தக்க உரை காண வேண்டும் மற்றும் வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைத நோக்கில் பாஷ்யம் இயற்ற வேண்டும் என்ற குறைகளைப் போக்கிட வேண்டும் என்பதை அறிந்துகொண்ட ராமானுஜர் வைணவ குருபரம்பரை ஆசார்யராகப் பொறுப்பேற்றார்.
குருபரம்பரை ஆசார்யராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ராமானுஜர் முன் பல சமுதாய முரண்கள் சவாலாக இருந்தது. குறிப்பாக சாதிய ஏற்றத் தாழ்வுகள், மத ரீதியான பிரச்சினைகள், போன்றவை வைணவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிரமங்கள் இருந்தன. ராமானுஜர் தீவிரமாகச் சிந்தித்து கலியுகத்தில் மக்கள் பின்பற்றத் தக்க பக்தி மார்க்கம், அர்ச்சை வழிபாடு, சரணாகதி தத்துவங்கள் அடங்கிய விசிஷ்டாத்வைத கோட்பாட்டினை ஏற்படுத்தி, கடவுள் முன் அனைவரும் சமம், மனிதப் பிறவியில் எவ்வித பேதங்களுக்கும் இடமில்லை போன்ற கருத்துகளை முன் வைத்து மக்களிடையே வைணவத்தை வளர்த்தெடுத்தார். இந்த அணுகுமுறை மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
சமய பிரச்சாரத்துக்காகவும், நிர்வாகத்துக்காகவும் பல மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு சமயத் தலைவரை நியமித்தார். இந்த வகையில் 74 ஆசார்யர்களை நியமித்தார். அதேபோல் வெவ்வேறு சாதி பிரிவைச் சேர்ந்த 54 அறிஞர்களையும் தேர்வு செய்து ராமானுஜர் அவர்களிடம் சமய நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார்.
ராமானுஜருக்கு முன்பிருந்த வியாசர், பாருகி, பராங்குசர், நாதமுனிகள், ஆளவந்தார் முதலிய மகான்களின் கொள்கைகளையே சேகரித்து ஒவ்வொரு செய்தியிலும் அவர்களது மொழிகளையே மேற்கோளாக்கி விசிஷ்டாத்வைதத்தை நிலை நாட்டினார். பரமாத்வான இறைவன் ஒருவர்தான் இருக்கிறார். ஸ்ரீமந் நாராயணனே அந்த முழுமுதற் கடவுள். அவருக்கு உடலாயிருப்பது ஜகத் என்கிற உலகம். அந்த உடலில் கணக்கற்ற உயிர்த் தத்துவங்களாயிருப்பது ஜீவன்கள். சூரியனிடமிருந்து எண்ணிலடங்கா கிரணங்கள் தோன்றி வருவது போன்று ஜீவன்கள் பரமாத்மாவிலிருந்து உருவாகின்றனர் என்கின்ற கருத்துகளை மிக ஆழமாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார் ராமானுஜர்.
ராமானுஜரின் பணிகள் அனைவருக்குமாக இருந்தது. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரையும் நாராயண வழிபாடு என்ற ஒற்றை குடையில் இணைத்தவர் அவர். தன்னை எதிர்த்தவர்களையும்கூட அரவணைத்து ஒருமைப்பாட்டைப் பேசினார். அதன் பிறகே பாரதம் முழுவதிலும் பக்தி இயக்கம் பரவியது. தென்னாட்டில் ராமானுஜர் விதைத்த விதையை மீரா, கபீர்தாசர் போன்றவர்கள் வடநாட்டில் முன்னெடுத்தார்கள். இறைவனின் முன்னால் யாருக்கும் பேதமில்லை என்று முழங்கினார்.
திருக்கோட்டியூர் நம்பிகளிடத்தில் பெற்ற ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திரத்தின் பொருளைக் கோபுரத்தின் மேலேறி மக்களுக்குப் போதித்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திருக்கச்சி நம்பிகள், பெரிய நம்பிகளை தமது ஆசார்யர்களாக ஏற்றுக் கொண்டார். மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் திருக்குலத்தார்களுக்கு வழிபாட்டு உரிமையைப் பெற்றுத் தந்தார். தொண்டனூரில் பெரிய ஏரியை நிர்மாணித்து மக்களின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்தார். பீபி நாச்சியாருக்குத் தனி சந்நிதி ஏற்படுத்தி மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார். இப்படி பல புரட்சிகளைச் செய்தவர் ராமானுஜர். முதன்முறையாக 11ஆம் நூற்றாண்டிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் பிரவேசம் செய்ய வழிகாட்டியது மிகப் பெரிய ஆன்மிகப் புரட்சியாகும்.
தவிரவும் ராமானுஜர் மிகச் சிறந்த நிர்வாகி என்பதை தமது கோயில் நிர்வாகங்கள் மூலம் மெய்ப்பித்தவர். ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தைத் திருத்திப் பணிக்கொண்டவர். முறையான நிர்வாக அமைப்பு என்பது சோழர் ஆட்சிக் காலத்தில் கிராமம் முதல் அனைத்து நிலைகளிலும் கட்டமைப்பு முறையாக நிர்வகிக்கப்பட்டதுகூட ராமானுஜர் கோயில் நிர்வாகக் கட்டமைப்புக்கு உந்துதலாக இருந்திருக்கலாம். மேலும் திருப்பதி கோயில் நிர்வாகத்தையும், நடவடிக்கைகளையும் முற்றிலும் முறைப்படுத்தினார். கோயில் பூஜை செய்யும் முறை, திருவிழாக்கள் நடத்தும் முறை, பூஜை காலங்களில் திருமாலுக்குச் செய்ய வேண்டிய நிவேதனங்கள் ஆகிய அனைத்து விவரங்களையும் கொண்ட கையேட்டைத் தயாரித்தார். அந்த முறையிலேயே இன்றளவும் திருப்பதி கோயிலில் கடைப்பிடிக்கப்படுகிறது. மலைக்குக் கீழே கோவிந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளது. அங்கே கோயில் பணி செய்யும் ஊழியர்களுக்கு வீடுகள் அமைத்து சிறிய நகரத்தை உருவாக்கினார். அதுபோல் ஆன்மிகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களில் ஆன்மிகத் தலைவராக்கினார். இது அந்தக் கால கட்டத்தில் மிகப் பெரிய புதிய சிந்தனையாகவும், செயல்பாடாகவும் பார்க்கப்பட்டது.
இப்படி தனது அயராத, திட்டமிட்ட சேவையால் வைணவம் என்ற ஆலமரம் இன்று விழுதுவிட்டு திடமுடன் இருக்க அன்று ராமானுஜர் விதைத்த விதைதான் காரணமாகும். ராமானுஜர் திருநாடு அலங்கரித்து 883 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்றும் சாதி, மதம் என்று சமுதாயம் பிரிந்து கிடக்கிறது. எண்ணிப் பார்த்தால் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் ராமானுஜர் நமக்குத் தேவைப்படுகிறார் என்பதே நிதர்சனமான உண்மை. “ராமானுஜன் தாள்பிடித்தார், பிடித்தாரைப் பற்றி நன்னும் திருவுடையோம்” என்பது போல் அவரின் கழலினைகளைப் பற்றி உய்த்தெழுவோம்.
(28.04.2020 இன்று ஸ்ரீமத் ராமானுஜர் திரு அவதாரத் திருநாள்
கட்டுரையாளர் குறிப்பு : செஞ்சியைச் சேர்ந்த எழுத்தாளர். திருமலை திருப்பதி தேவஸ்தான பிரபந்த உபன்யாசகர், செஞ்சி திருக்குறள் பேரவை, தமிழியக்கம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக இயங்கி வருபவர்.