”நீங்கள்தான் கடவுள்”: செவிலியர் காலில் விழுந்து நன்றி கூறிய டீன்!

Published On:

| By Balaji

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்களின் காலில் விழுந்து அம்மருத்துவமனை முதல்வர் நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு செவிலியர் தினம் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முன் களப்பணியாளர்களான செவிலியர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று(மே 12) கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனை வாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப் படத்துக்கு மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, செவிலியர்களிடையே பேசிய மருத்துவமனை முதல்வர் ரவீந்தரன், மருத்துவர்கள் இடும் கட்டளைகள் மற்றும் அறிவுரைகளை ஏற்று பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் சென்று அணுகும் செவிலியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் என பாராட்டி பேசினார்.

அப்போது உணர்ச்சி வசப்பட்ட மருத்துவமனை டீன் யாரும் எதிர்பாராத வகையில், கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்து, ”நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள்” என கூறி அழுது கண்ணீர் விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-வினிதா**

,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share