u26 வாரக் கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

Published On:

| By Balaji

இதய கோளாறால் பாதிக்கப்பட்ட 26 வாரக் கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை-3) அனுமதி வழங்கியுள்ளது.

கருவில் இருக்கும் குழந்தை வளர்ச்சியின்மை அல்லது கருவால் தாயின் உயிருக்கு ஆபத்து போன்ற சூழல்கள் இருந்தால் மட்டுமே அந்தக் கருவை கலைக்க இந்திய அரசியல் சட்டம் அனுமதியளிக்கிறது. கரு கலைப்பு சட்டம் 1971-ன் படி, வயிற்றில் 20 வாரங்களுக்கு மேல் கரு வளர்ந்த பின்னர் அதனைக் கலைக்க முடியாது. 12 முதல் 20 வாரங்களில் கருவை கலைக்கச் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. 20 வாரங்களுக்கு மேல் வளர்ந்த கருவை கலைப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கட்டாயம். இந்நிலையில் மேற்கு வங்கம் கொல்கத்தாவை சேர்ந்த ஷர்மிஸ்தா சக்ரபோதி என்ற பெண்ணும், அவரது கணவரும் 24 வார கருவை கலைக்கக் கோரி கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் பல்வேறு இதய கோளாறுகளால் பாதித்த தங்களது 24 வார கருவை கலைக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும், குழந்தை ஆரோக்கியமாக இல்லை என்பதை அறிந்த அந்தப் பெண் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் உத்தரவிட்டிருந்தது. மேலும் கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையின் ஏழு மருத்துவர்கள் கொண்ட குழு அப்பெண்ணைப் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.எம் சப்ரே மற்றும் எம்.கான்வில்கர் ஆகியோர் அமர்வு முன் இன்று ஜூலை-3 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது அப்பெண்ணின் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவரது கருவில் வளரும் குழந்தை இதய கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,, கர்ப்பத்தைத் தொடரும் பட்சத்தில் பிரசவத்தின் போது, தாய் மன நோயால் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தை பிறந்தாலும் அதற்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் தற்போது 26 வார காலம் வளர்ந்த கருவை கலைக்க அனுமதி வழங்கியுள்ளனர்.

தாய் அல்லது கருவில் உள்ள சிசுவின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றால் 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்கலாம் என்ற 1971ஆம் ஆண்டு கருக்கலைப்புச் சட்டத் திருத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share