ஹாங் காங்கிற்கு எதிரான தனது முதல் போட்டியில் இந்தியா துவக்க விக்கெட்டை இழந்து நிதானமாக ஆடி வருகிறது.
ஆசியப் கோப்பையில் இந்தியா இன்று தனது முதல் போட்டியில் ஹாங் காங் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. கத்துக்குட்டி அணிக்கு எதிரான ஆட்டம் என்பதால் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இங்கிலாந்து தொடரில் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தியிருந்த கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்குப் பதிலாக அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். அறிமுக வீரரான இடக்கை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
டாஸ் வென்ற ஹாங் காங் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக வந்த ரோஹித் ஷர்மா-ஷிகர் தவன் ஜோடி நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தத் தொடங்கியது. 7.4 ஓவர்களில் ஸ்கோர் 45ஆக உயர்ந்தபோது இந்தியாவின் முதல் விக்கெட் விழுந்தது. 23 ரன்கள் சேர்த்து ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் வழக்கமாக விராட் கோலி களமிறங்கும் மூன்றாவது இடத்தில் இம்முறை அம்பத்தி ராயுடு களமிறக்கப்பட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பிய ராயுடு அணியில் நிரந்தர இடத்துக்கான தேடலில் இறங்கினார். அவர் சந்தித்த முதல் 40 பந்துகளில் பவுண்டரிகளே இல்லாமல் 23 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் தவன் ஒருநாள் அரங்கில் அவரது 26ஆவது அரைசதத்தைக் கடந்தார்.
சற்றுமுன்வரை இந்திய அணி 25.4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. தவன் 72 ரன்களுடனும், ராயுடு 44 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.,”
