சென்னையில் மோனோ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தமிழக அரசு இன்று(ஜூலை,8) அறிவித்துள்ளது
சென்னையில் ஆலந்தூர்-கோயம்பேடு, ஆலந்தூர்-விமானநிலையம், திருமங்கலம் – நேருபூங்கா உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2006ஆம் ஆண்டு சென்னைக்கு மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். பின்னர் திமுக ஆட்சிக்கு வந்துபோது மோனோ ரயிலுக்குப் பதிலாக மெட்ரோ ரயில் போக்குவரத்தை அறிவித்தது. அதற்கான ஒப்புதலை 2009 ஆம் ஆண்டு பெற்று செயல்படுத்தியது. 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார். அப்போது மோனோ ரயில் திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், மோனோ ரயில் திட்டம் தோல்வியடைந்த திட்டம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சிகள் அத்திட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தின. இதனால், அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவை இல்லாத இரண்டு வழித்தடத்தில் 6,402 கோடி ரூபாய் செலவில், 43.48 கிலோ மீட்டர் தூரத்துக்கு மோனோ ரயிலை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகப் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டப்பேரவையில் இன்று (ஜூலை,8) அறிவித்தார்.
அதன்படி, பூவிருந்தவல்லி முதல் கத்திப்பாரா, போரூர் முதல் வடபழனி வரை முதல் வழித்தடத்திலும், வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 2வது வழித்தடத்திலும் மோனோ ரயில் இயக்கப்படும். போரூர்-கத்திப்பாரா, போரூர்-வடபழனி இடையேயான 20.68 கிலோமீட்டர் தூரத்திற்கு 3,267 கோடியும், வண்டலூர் முதல் வேளச்சேரி இடையேயான 22.80 கிலோமீட்டர் தூரத்திற்கு 3,135 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
