ரெப்கோ வங்கி பதிலளிக்க உத்தரவு!

Published On:

| By Balaji

ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குனர் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு, ரெப்கோ வங்கி பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை மற்றும் மியான்மர் நாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களின் நலனுக்காகத் துவங்கப்பட்டது ரெப்கோ வங்கி. இந்த வங்கியின் நிர்வாக இயக்குனராக இருந்த வரதராஜன், கடந்த 2016ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இதன்பின் பொறுப்பு நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார் இஸபெல்லா. கடந்த அக்டோபர் மாதம், இவரை நிர்வாக இயக்குனராக நியமித்து ரெப்கோ வங்கி அறிவிப்பு வெளியிட்டது.

ADVERTISEMENT

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இஸபெல்லாவின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என மத்திய உள் துறைச் செயலாளருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்த புகார் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு இன்று (நவம்பர் 21) விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ரெப்கோ வங்கி நிர்வாகம் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை ஒத்திவைத்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share